டெல்லி: "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தேர்தல் வியூக குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.
லோக்சபா தேர்தலுக்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் தற்போதைய நிலையில் 28 கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
ஒருங்கிணைப்பு குழு: "இந்தியா" கூட்டணி இதுவரை 3 ஆலோசனைக் கூட்டங்களை பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் நடத்தி உள்ளன. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள்: "இந்தியா கூட்டணி" ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் உறுப்பினர் விவரம்:
வேணுகோபால் - காங்கிரஸ்
டி.ஆர்.பாலு- திமுக
சரத் பவார் - தேசியவாத காங்கிரஸ்
அபிஷேக் பானர்ஜி- திரிணாமுல் காங்கிரஸ்
ஹேமந்த் சோரன்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
சஞ்சய் ரவுத் - சிவசேனா- உத்தவ் பிரிவு
தேஜஸ்வி யாதவ்- ராஷ்டிரிய ஜனதா தளம்
ராகவ் சத்தா- ஆம் ஆத்மி
ஜாவத் அலிகான்- சமாஜ்வாதி கட்சி
லாலன் சிங்- ஐக்கிய ஜனதா தளம்
டி.ராஜா- இந்திய கம்யூனிஸ்ட்
ஒமர் அப்துல்லா - தேசிய மாநாட்டு கட்சி
மெகபூபா முப்தி - மக்கள் ஜனநாயக கட்சி
மற்றும் சிபிஎம் பிரதிநிதி இடம் பெற்றிருக்கின்றனர்.
அபிஷேக் பானர்ஜி ஆப்சென்ட்?: ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி அபிஷேக் பானர்ஜி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் இன்றைய கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி பங்கேற்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
என்ன வியூகம்: இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவாக மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் "இந்தியா" கூட்டணியின் பொது வேட்பாளர் உ.பி. மாநிலம் கோஷி தொகுதியில் அமோக வெற்றியைப் பெற்றார். இதனை முன்னுதாரணமாக வைத்து பாஜக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது என்கின்றன தகவல்கள்.
பிரசார பேரணிகள்: "இந்தியா" கூட்டணியின் பிரசார கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அதில் பாட்னா, நாக்பூர், சென்னை, குவஹாத்தி, டெல்லி, லக்னோ, ஜெய்ப்பூர், போபாலில் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. அதுபற்றியும் இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடும்.
தொலைநோக்கு திட்டம்: மேலும் "இந்தியா" கூட்டணியின் தொலைநோக்கு திட்டம் என்ன என்பது குறித்து அக்டோபர் 2-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
செப்டம்பர் 22 கூட்டம்: இதனிடையே "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, சோசியல் மீடியா குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 22-ந் தேதி நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் குறித்தும் இன்று விவாதிக்கப்படுகிறது.