தேனி: தேனியை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் ஆப் மூலம் திருப்பூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதையும் உண்மை என்று நம்பிய தேனி டாக்டர் ரூ.18 லட்சம் வரை அனுப்பி உள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார். எப்படி ஏமாற்றினார்கள் என்பதை பார்ப்போம்.
தேனியை சேர்ந்த டாக்டர் ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அவரது டெலிகிராம் ஆப்பிற்கு கடந்த ஜூலை மாதம் மர்ம நபர் ஒருவர், ஒரு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அதில், ஒரு இணையதள முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இணையதளம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதித்து வருவதாக மர்ம நபர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். பல லட்சம் லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார் மர்ம நபர்.
அதை நம்பிய டாக்டர், அந்த இணையதளம் மூலம் முதலீடு செய்துள்ளார். முதலில் அவருக்கு லாபம் கிடைப்பது போல் இணையதளம் காட்டியிருக்கிறது. அதை நம்பி அவர் மீண்டும், மீண்டும் முதலீடு செய்தார். அந்த வகையில், மொத்தம் ரூ.18 லட்சத்து 12 ஆயிரத்து 471 முதலீடு செய்திருக்கிறார்.. அதன்பிறகும் மர்ம நபர் மீண்டும் முதலீடு செய்ய சொல்லியிருக்கிறார்.. ஆனால் அவரால் ஏற்கனவே செலுத்திய பணத்தையும் திரும்ப எடுக்க முடியாத நிலை இருந்தது. அப்போது தான், இவை எல்லாம் செட்டப் என்பதும், ஏமாற்றப்பட்டதும் டாக்டருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் டாக்டர் உடனடியாக புகார் செய்தார்.
அதன்பேரில் தேனி நகர இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். டாக்டர் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வங்கி கணக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த தவுபிக் (வயது 24) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அவரை தேனி சைபர் கிரைம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர், தனது வங்கி கணக்கு விவரத்தை திருப்பூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பவரிடம் கொடுத்ததாகவும், தனது வங்கிக் கணக்கில் வரும் பணத்தை எடுத்து கொண்டு தனக்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக மட்டும் அவர் கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் ராமகிருஷ்ணனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் சென்னையை சேர்ந்த நபர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தவுபிக், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள். தேனியில் டாக்டர் ஒருவரே 18 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage