நெல்லை: நெல்லையில் உதவி கமிஷனர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி, காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவருவதால், இரவு நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான், நேற்றுமுன்தினம் மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்தி மேற்பார்வையில் நெல்லை மாநகர சரகத்தில் இரவு ரோந்து பணியில் பெண் இன்ஸ்பெகடர்கள் ஈடுபட்டிருந்தனர்.
டவுன், சந்திப்பு, பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 இடங்களிலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு தலைமையாக உதவி போலீஸ் கமிஷனர், ஒருவரும் டியூட்டில் இருந்தார்.
தியேட்டர்: ஆனால், இரவு 11.30 மணிக்கு திடீரென தன்னுடைய ரோந்து வாகனத்தில் ஏறி, நேராக உடையார்பட்டி பகுதியிலுள்ள தியேட்டருக்கு சென்றார்.. தியேட்டருக்கு வெளியே ஜீப்பில் காவலுக்கு டிரைவரை உட்காரவைத்துவிட்டு, உதவி கமிஷனர் புஷ்பா 2 படம் பார்க்க உள்ளே சென்றார்..
இந்த நேரத்தில், போலீஸ் கமிஷனர் மூர்த்தி, வாக்கி டாக்கியில் உதவி கமிஷனரை கூப்பிட்டுள்ளார். ஆனால் சுமார் 15 நிமிடங்கள் ஆகியும், கமிஷனரை, உதவி கமிஷனர் தொடர்கொள்ளவில்லை.. அதனால் கன்ட்ரோல் ரூமிலிருந்து இருந்து போலீசார், உதவி கமிஷனரின் செல்போனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.. இதைக்கேட்டு பதறிப்போன உதவி கமிஷனர், தியேட்டரில் இருந்து வெளியே ஓடிவந்து, வயர்லெஸ் மைக்கில் கமிஷனரை தொடர்பு கொண்டுள்ளார்.
நைட் டியூட்டி: அப்போது கமிஷனர் வாக்கிடாக்கியில், "எங்கே இருக்கறீங்க?" என்று கேட்டார்.. அதற்கு உதவி கமிஷனர், "தச்சநல்லூர் பகுதியில் ஒரு பிரச்சனை சார், அதனால அங்கேதான் நிக்கிறேன்" என்றார்..
ஏற்கனவே உண்மை நிலவரத்தை அறிந்திருந்த கமிஷனர், "நைட் டியூட்டி பார்க்காமல் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்துட்டு இருக்கீங்க... பெண் இன்ஸ்பெக்டர்கள் எல்லாரும் அங்கே கண்விழித்து டியூட்டி பார்க்கும் நேரத்தில், எந்தவித பொறுப்புமில்லாமல் நீங்கள் இப்படி செயல்படுவது நியாயமா?" என்று கண்டித்தார்.
ஓபன் மைக்கிலேயே நடைபெற்ற இந்த உரையாடலை, ஒட்டுமொத்த மாநகர போலீசாரும் கேட்டு அதிர்ந்தனர்.. இது தற்போது நெல்லை காவல்துறை வட்டாரத்தில் விவாதப்பொருளாகவும் உருவெடுத்துள்ளது.. இப்படித்தான் கடந்த வாரம் நைட் டியூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது.
பரபரப்பு: இப்படிப்பட்ட சூழலில், பெண் இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணியில் இருந்தபோது, உதவி கமிஷனர் புஷ்பா-2 படம் பார்த்தது குறித்து துறை ரீதியான விசாரணை உதவி கமிஷனர் மீது நடந்து வருகிறதாம். இந்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage