ராணிப்பேட்டை: பல்சர் பைக்கை பார்த்ததுமே, உடனே விலை கொடுத்து வாங்கிவிட்டார் அரக்கோணத்தை சேர்ந்த சூர்யா. ஆனால், இந்த பைக் ஏன் எரிந்தது? என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணையை ராணிப்பேட்டை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த திமிரி பகுதியில் உள்ளது, புகழ்பெற்ற டூ வீலர் ஷோ ரூம்.. இந்த இருசக்கர வாகன ஷோரூமில் இருந்து சூர்யா என்ற நபர் புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
ரீஸ்டார்ட்: பைக்கை வாங்கி சுமார் ஒரு மணி நேரத்தில் சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, மறுபடியும் ஸ்டார்ட் செய்ய முயன்றபோது அதில் இருந்து குபீரென தீப்பொறி கிளம்பியுள்ளது.. இதைப்பார்த்து பதறிப்போன சூர்யா, தீப்பொறியை அணைக்க முயன்றார்.. ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே பைக் முழுவதும் குபுகுபுவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட சூர்யா, பைக்கை விட்டு விலகி ஓடிச்சென்றார்.. இதன்காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வாலாஜா சாலை அருகே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, புதிதாக வாங்கிய பைக் தீப்பற்றி எரிந்தது ஏன்? என்பது குறித்தும் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூரை சேர்ந்தவர் சூர்யா.. இவர் ராணிப்பேட்டைய திமிரியில் உள்ள ஷோரூமில், இருந்துதான் இந்த புதிதாக பல்சர் பைக் வாங்கியிருக்கிறார். தன்னுடைய நண்பருடன் அம்மூரில் சோளுங்கர் - வாலாஜா சாலையில் பைக்கை ஓட்டிக்கொண்டு வந்தவர், சாலையோரமாக நிறுத்திவிட்டு, மறுபடியும் பைக் ஸ்டார்ட் செய்தபோதுதான் தீப்பொறி கிளம்பியிருக்கிறது.
ஆசை ஆசையாக வாங்கிய பைக், கண்ணெதிரிலேயே எரிந்து எலும்புக்கூடாக நிற்பதை பார்த்து சூர்யா அதிர்ச்சியில் உறைந்தார்.. பைக் எரிவதை, சாலையில் சென்றவர்கள் பரிதாபத்துடனும், அதிர்ச்சியுடன் பார்த்தவாறே சென்றார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.
ஜாவா பைக்குகள்: சமீபத்தில்கூட, சென்னை பம்மலில் வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜாவா பைக்குகள் தீயில் எரிந்து கருகியிருந்தன.. வாங்கி 2 நாட்களே ஆன புதிய ஜாவா பைக்குகள், ஒரே சமயத்தில் எப்படி திடீரென தீப்பற்றி எரிந்தது என்ற விசாரணையை போலீசார் முன்னெடுத்திருந்தனர்.
ஆனால், இப்படி வாகனங்கள் தீப்பற்றி எரிவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதுகுறித்து ஒருமுறை ஆய்வு செய்தபோது, சிஎன்ஜி, எல்பிஜி போன்றவற்றை மாற்றும்போது, அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதனாலேயே வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகி விடுவதாக கூறப்படுகிறது.
மாற்றங்கள்: அதேபோல, எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் பேட்டரிகள்தான் பயன்படுத்துவார்கள். சமீபகாலமாகத்தான் பேட்டரிகளில் மாற்றங்கள் வந்துள்ளதாம்.. எலெக்ட்ரானிக் வாகனங்களை தொடர்ச்சியாக இயக்கினாலும் பேட்டரி ஹீட் ஆகும். லைசென்சர் அதிகம் சூடானாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கலாம். கோடை காலங்களில் அதிக வெப்பத்தினாலும் பைக்குகள் நடுவழியில் தீப்பற்றி எரியலாம். ஆனால், ராணிப்பேட்டை பல்சர் பைக் ஏன் எரிந்தது? என்ன பிரச்சனை என்றுதெரியவில்லை. தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.