ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைய மக்கள் வாக்களித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சி எம்பி ராகுல் காந்தி உறுதியளித்து இருக்கிறார்.
சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் தெலுங்கானாவில் 2 வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியுடன் பி.ஆர்.எஸ். ஆட்சிகாலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 19 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி புபால்பள்ளி முதல் பெட்டபள்ளி வரை விஜயாபெரி என்ற யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த யாத்திரையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக 3 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்து உள்ள அக்கட்சி எம்பி ராகுல் காந்தி வருகை தந்து இருக்கிறார்.
இந்த யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய அவர், "நாட்டின் முக்கிய பிரச்சனையாக இருப்பது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான். அதுதான் நாட்டின் எக்ஸ் ரே போன்றது. தலித்துகள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது வெளிச்சம் பாய்ச்சி அவர்களின் நிலை என்ன என்று காட்டும். நாட்டின் நிதி எப்படி பங்கிடப்படுகிறது என்பதை அறிய முடியும். கடைசியாக எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடமும் கேசிஆரிடமும் மக்கள் கேட்க வேண்டும்.
மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தெலுங்கானாவில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தெலுங்கானாவின் கனவுகள் நிறைவேற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை நான் உங்களுக்கு சத்தியமிட்டு சொல்கிறேன்." என்றார்.