உ. வாசுகி சொன்னதுமே கவனித்த கோவை.. பாயாசமும் தெரியல, பாசிசமும் தெரியல.. அவரை நினைச்சாலே பயமா இருக்கு..

post-img
சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என்று சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.. அத்துடன், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது என்பதுடன், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று எழுச்சியுடன் தொடங்கியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை வரதராஜபுரம் ஸ்ரீ சாய் விவாஹா மஹால் எதிரில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.. நினைவு ஜோதி: இதனையடுத்து, சின்னியம்பாளையம் நினைவு ஜோதியை சூலூர் ஒன்றிய குழு செயலாளர் ஏ.சந்திரன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே வெள்ளையங்கிரி எடுத்து வர, முன்னாள் மாநில குழு உறுப்பினர் என்.அமிர்தம் பெற்றுக்கொண்டார். ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் நினைவு ஜோதியை கோவை மேற்கு நகர குழு செயலாளர் பி.சி.முருகன் தலைமையில் எஸ்.ஆறுமுகம் நிறுத்துவர எஸ் கருப்பையா பெற்றுக்கொண்டார். மாநாட்டில் கட்சி கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஏற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது: சிறுபான்மையினர்: "இந்தியாவில் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தன்னுடைய சொந்த காலில் நிற்க முடியாமல் பிற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.. பாஜக அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத கொள்கையை கடைபிடிக்கும் அரசாகவும் உள்ளது. பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என்று சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. திராவிட கருத்தியலின் சில கூறுகள் சித்தாந்த ரீதியாக ஹிந்துத்துவாவை எதிர்க்க பயன்படுகின்றன. அதனால் அவர்களுடன் சேர்ந்து நின்று வளர்ந்து வரும் மதவாத சக்திகளின் வளர்ச்சியை தடுக்க வேண்டும். பாயாசம்: பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆட்சியை பிடித்தால் என்ன செய்வார் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு கம்பெனிக்கு வொர்க்பிரம் ஹோம் பண்ணலாம். அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது" என்றெல்லாம் மாநாட்டில் உ.வாசுகி உரையாற்றியிருக்கிறார்.

Related Post