சென்னையில் டி.டி.எஃப் வாசன் சென்ற கார் மோதி படுகாயமடைந்த வாகன ஓட்டி ...

post-img

டிடிஎஃப் வாசன் வந்த கார் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காரை ஓட்டி வந்த இயக்குநர் செல்அம் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதிவேக பயணம், சட்டத்திற்கு முரணாக சாகசம், அலட்டல் பேச்சு, தொட்டதுக்கெல்லாம் சவால் என சாதாரண விவகாரத்தை எல்லாம் சர்ச்சைக்குள்ளாக்கி, 2k கிட்ஸின் எதிர்காலமாக தன்னை காட்டிக் கொள்ளும் டிடிஎப் வாசன் தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதிகாலை நேரத்தில் அதிவேகமாக காரில் வந்த டிடிஎப் குழுவினர், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் ஓரத்தில் உரசியபடி சென்று முன்னாள் சென்ற பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

விபத்தை வெளியில் தெரியாமல் மறைக்க முயன்ற போதும், சுற்றியிருந்த சிசிடிவியில் சிக்கியதால் தற்போது வழக்கில் சிக்கியுள்ளார் காரை ஓட்டிய நபர்.

பைக் ரைடராக யூடியூப்பில் வலம் வந்து இளைஞர்கள் மற்றும் 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் டி.டி.எஃப்.வாசன். நாடு முழுவதும் பைக் ரைடு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி லட்சக்கணக்கான கல்லூரி இளைஞர்களை தன்பக்கம் ஈர்த்தார் டி.டி.எஃப்.வாசன்.

பைக்கில் அதிவேகமாக பயணிப்பது, சட்டத்துக்கு முரணாக சாகசம் செய்வது என பல சர்ச்சைகளிலும் TTF வாசன் சிக்கியுள்ளார். அவ்வப்போது காவல்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தும் சில பதிவுகளையும் பதிவிட்டு வாசன் வழக்குகளையும் சந்தித்து வந்தார். இந்த நிலையில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் டிடிஎப் வாசன், நடிகர் வாசனாக அறிமுக ஆகியுள்ளார். பைக்கில் பறந்தபடி டிடிஎப் வாசன் கையில் சூலாயுதம் ஏந்தியவாறு வெளியான போஸ்டர் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் சென்னையில் டிடிஎப் வாசன் சென்ற கார், பைக் மீது மோதிய விவகாரம் மீண்டும் சூட்டை கிளப்பியுள்ளது. சென்னை அமைந்தகரை அருகே செவ்வாய் காலை 6.40 மணியளவில் ஸ்கைவாக் பின்புறம் உள்ள மேம்பாலத்தின் ஓரமாக டிடிஎப் வாசன் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமிருந்த பாலத்தின் ஓரத்தில் ஆபத்தான வகையில் உரசிச் சென்றது. அந்த வேகத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இந்த விபத்துக் காட்சிகள் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. விபத்தில் பைக் மற்றும் காரின் முன்பகுதி சேதமடைந்தன. விபத்து நடந்த இடத்தில் கூட்டம் சேர்ந்தவுடன் அங்கிருந்து டிடிஎஃப் வாசன் ஆட்டோவில் ஏறி செல்ல முயன்றுள்ளார். அப்போது அதனை வீடியோ எடுத்தவரிடம் வாசன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்தில் காயம் அடைந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்காவிட்டாலும், விபத்துகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டிடிஎப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கி வரும் செல்அம் என்பவர் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் காயமடைந்த நபருக்கு மருத்துவச் செலவுகளை தான் ஏற்பதாக கூறியதன் பேரில் இரண்டு தரப்பும் சமாதானமாக சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தறிகெட்டு வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Post