சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.400 கோடிக்கு கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவலை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
திமுகவில் முக்கிய தலைவராக கருதப்படுபவர் ஜெகத்ரட்சகன். முன்னாள் மத்திய அமைச்சரான இவர் தற்போது திமுகவில் எம்பியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த 5ம் தேதி முதல் அவரது வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
அவர் நடத்தும் ஹோட்டல் உட்பட அவருக்குத் தொடர்புடைய 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட பல இடங்களில் இந்த சோதனைகள் தீவிரமாக நடந்து வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பழிவாங்கி வருகிறது. இதுவும் அப்படித்தான். பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு அளவேயில்லை என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில் தான் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை முக்கிய தகவல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் சோதனையில் சிக்கிய மற்றும் கண்டுப்பிடிக்கப்பட்ட விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கல்வி நிறுவனங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டாத கட்டண ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.
மேலும் கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை அழைத்து வர ஏஜென்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் கமிஷன் தொகை ரூ.25 கோடி மறைக்கப்பட்டுள்ளது. மதுபான வணிகத்தில் போலி வரவு, செலவுகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும். ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி பார்த்தால் ரூ.1000 கோடிக்கு கணக்கு காட்டாமல் வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.