டெல்லி உணவகத்தில் தீ விபத்து.. உயிர் தப்ப அருகே உள்ள கட்டிடத்தில் குதித்த போது ஷாக்.. என்ன நடந்தது

post-img

டெல்லி: டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய பகுதியில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அங்கிருந்த பலரும் மாடியில் தஞ்சம் புகுந்தனர். அப்போது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள், பக்கத்தில் இருந்த கட்டிடங்களில் குதித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பொதுவாக உணவகங்களில் சிலிண்டர் உள்ளிட்ட எளிதாகத் தீப்பற்றும் பொருட்கள் நிறைய இருக்கும். இதனால் உணவகங்களில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தீ விபத்து: இதற்கிடையே டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரஜோரி கார்டன் மெட்ரோ நிலையத்திற்கு அருகே உள்ள இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உணவகம் இயங்கி வந்தது. இங்கு மதியம் 2.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு எளிதாகத் தீப்பிடிக்கும் பொருட்கள் நிறைய இருந்த நிலையில்,தீ மளமளவெனப் பரவியது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், தீயைப் போராடி அணைத்தனர். இது தொடர்பாக டெல்லி தீயணைப்பு பிரிவின் தலைவர் அதுல் கர்க் கூறுகையில், "பிற்பகல் 2.01 மணியளவில் ரஜோரி கார்டன் மெட்ரோ நிலையம் அருகே எங்களுக்கு தீ அழைப்பு வந்தது. தீயைக் கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன" என்றார்.
உயிரிழப்பு இல்லை: நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை வெளியாகவில்லை. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது. இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினர்: மேலும், தீ விபத்து ஏற்பட்ட போது உணவகத்தில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. உணவகம் முதல் மாடியில் இருந்த நிலையில், தீ காரணமாக அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர்கள் மாடிக்குச் சென்றுள்ளனர். தீயால் புகை வெளியேறிய நிலையில், அதைப் பார்த்து அஞ்சிய அவர்கள், மாடியில் இருந்து அருகே உள்ள கட்டிடங்களுக்குக் குதித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஷாக்: அப்படி உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகே உள்ள கட்டிடத்தில் குதித்த போது, அதில் ஓரிருவருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது: இந்த தீ விபத்து தொடர்பாக அருகே உள்ள கடைக்காரர்கள் கூறுகையில், "மதியம் 2 மணியளவில், ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் இருந்து கறுப்பு நிறத்தில் புகை கிளம்பியதைப் பார்த்தோம். உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்குத் தகவல் கொடுத்தோம். தீ விபத்து காரணமாக சுமார் 25க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் மாடியில் இருந்து பக்கத்தில் இருக்கும் கட்டிடங்களிலும் குதித்தனர்" என்றார்.

Related Post