சென்னை: தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை தரக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ரெய்டு நடத்தி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் இருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணை நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஆவணங்களின் நகல் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் தான் இருப்பதாகவும், அங்கிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு அதாவது இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள், எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் உள்ளதால் வழங்க முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage