6 வீல்.. தங்கம் போன்ற உடல்.. ஆங்காங்கே சென்சார்.. கேமரா.. நிலவில் ரோவர் நகர்ந்தது

post-img

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3ன் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. நாசா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே இதுவரை ரோவர்களை பூமிக்கு வெளியே அனுப்பி உள்ள நிலையில் இந்தியா முதல்முறை இப்படி ஒரு ரோவரை பூமிக்கு வெளியே களமிறக்கி உள்ளது. அதிலும் நிலவின் தென் துருவத்தில் முதல்முறையாக வேற்றுகிரக பொருள் ஒன்று களமிறக்கப்பட்டு உள்ளது.

இந்த ரோவர் நிலவில் இறங்கிய போது என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன் 3 அடிப்படை விஷயங்களை பார்க்க வேண்டும். சந்திராயன் 3ல் பின்வரும் 3 முக்கியமான பாகங்கள் உள்ளன.

ப்ரோபல்ஷன் மாடுல்: இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படுத்தப்பட்ட சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திராயன் 3வை கொண்டு சென்றது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான். இது ஒரு பாக்ஸ் போல கீழே ராக்கெட் போன்ற திரஸ்டர்கள் கொண்ட அமைப்பு ஆகும். இதில் திரஸ்டர்களுக்கு சார்ஜ் கொடுப்பதற்காக சோலார் பேனல் இருக்கும். இதில்தான் லேண்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ரோவர் இருக்கும். இதில் லேண்டர், ரோவர் தவிர்த்து ஷேப் - Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) எனப்படும் அமைப்பும் உள்ளது. இது பூமியின் அளவை குறித்த ஆய்வை நிலவின் வட்டப்பாதையில் இருந்து மேற்கொள்ளும்.

சந்திராயன் 3 லேண்டர்: சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் (சமஸ்கிருதத்தில் "வீரம்") என்ற பெயரிடப்பட்ட லேண்டர் உள்ளது. இது பாக்ஸ் போன்ற தோற்றம் கொண்டது ஆகும். உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவில் களமிறக்க இதுதான் உதவும். இது தரையிறங்கும் பகுதியில் வெப்ப கடத்துத்திறனைப் பதிவுசெய்யவும் மற்றும் நிலநடுக்கங்களை உணரவும் உதவும். இதில் நான்கு கால் பகுதிகள் இருக்கும். அதேபோல் நான்கில் பக்கமும் திரஸ்டர்கள் இருக்கும். இது 800 நியுட்டன் பவரை கொடுக்க கூடியது. இதுதான் இன்று மாலை களமிறங்கியது.

ரோவர்: இதன் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருந்தது. பிரக்யான் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வரும். அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்லும். இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.

இதில் சூரிய வெளிச்சத்தை, குளிரை தாங்க தங்க நிறத்தில் கவர் செய்யப்பட்ட பகுதி இருக்கும். இது 14 நாட்கள் இயங்கும். சோலாரில் இயங்க கூடியது. இன்று வெற்றிகரமாக இது களமிறக்கப்பட்டது.

அந்த நொடி என்ன நடந்தது?:

சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலம் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கு "கோ அஹெட்" சிக்னல் அனுப்பப்பட்டது. இது விக்ரம் லேண்டர் இறங்கி சரியாக 4 மணி நேரம் கழித்து புழுதி எல்லாம் அடங்கிய பின் அனுப்பப்பட்டது. விக்ரம் லேண்டாரால் ஏற்பட்ட புழு ரோவரின் மீது படியாமல் இருக்க இந்த கால நேரம், எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரோவருக்கு ஆர்பிட்டர் கொடுத்த சிக்னலை லேண்டர் பகிர்ந்து கொண்டது. விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடைந்தது, பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கியது. பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வந்தது.

என்ன செய்யும்? இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும்.

லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ எடை கொண்டது.

குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது. லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல். சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தால். நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல். நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.


Related Post