இந்தியை திணிக்காதே! மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தாதே.. ராஜ்யசபாவில் திருச்சி சிவா

post-img
டெல்லி: இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது; இந்தியாவின் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது என்று ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் திருச்சி சிவா எம்பி பேசுகையில் இதனை வலியுறுத்தி பேசினார். ராஜ்யசபா விவாதத்தில் இன்று திருச்சி சிவா எம்பி பேசியதாவது: நாடு பிரிவினையின் போது பாகிஸ்தான் தனிநாடு உருவாக்கப்பட்ட போது இந்தியா எங்கள் தேசம் என்கிற உரிமையோடு இஸ்லாமியர்கல் இங்கேயே இருந்துவிட்டனர். அப்போது இஸ்லாமியர்களுக்கான உரிய உரிமைகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கான உரிமைகள் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுகின்றனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால்தான் இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமே கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் மாநிலங்களின் உரிமைகளை இந்த பாஜக அரசு பறித்து, நசுக்கி, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இந்தப் போக்கினால் தங்களது மாநில மக்களுக்கு மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை சீரமைக்க ராஜமன்னார் குழுவை அமைத்தார் கருணாநிதி. ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவை. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சமும் பாகுபாடும் காட்டப்படுகிறது. நாடு விடுதலை அடையும் முன்னர் ஆங்கிலம்தான் அலுவல் மொழி. அதன் பின்னர்தான் இந்தி மொழி திணிக்கப்பட்டது. பல்வேறு கலாசாரம், மொழிகள், மதங்களைக் கொன்ட இந்தியாவில் தற்போதைய பாஜக ஆட்சியில் அனைத்து மசோதாக்களுமே இந்தி மொழியில்தான் கொண்டுவரப்படுகிறது. நாட்டின் மொழிக் கொள்கைக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படுகிறது. 22 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் எங்கெங்கும் இந்தி மொழில்தான். இந்த நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு. அதை மத்திய பாஜக அரசு மறந்துவிடக் கூடாது; மாநிலங்களின் மொழிகளைப் புறக்கணிக்கும் போக்கும் கூடாது. இந்தி மொழித் திணிப்பை தமிழ்நாடு எப்போதும் ஒருபோதும் ஏற்கவே ஏற்காது. இவ்வாறு திருச்சி சிவா எம்பி பேசினார். ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர்: முன்னதாக இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்து ராஜ்யசபா எம்பி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும். இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றவும் விரும்பும் நமது நாடாளுமன்ற அமைப்புகளுக்கு இடையேயான பிணைப்பை நமது விவாதங்கள் வலுப்படுத்தட்டும். இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஐ நாம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நமது விவாதங்கள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நோக்கிய பாதையை ஒளிரச் செய்யட்டும். இவ்வாறு ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். ராஜ்யசபா துணைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: 1949ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், அரசியல் சாசனம் மனுஸ்மிருதி அடிப்படையில் இல்லாததால் அதை எதிர்த்தனர் என்பதை நாடு அறியும். ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்கள் அரசியல் சாசனத்தையோ, மூவர்ணக் கொடியையோ ஏற்கவில்லை. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்துதான், ஜனவரி 26, 2002 அன்று முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நமது அரசியலமைப்பு, நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் அதிகாரம் அளிக்கிறது. இது ஏழைகளின் குரல். சாதி, மதம் அல்லது பிரிவு அடிப்படையில் பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஆனால், இன்று அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வருங்கால சந்ததியினருக்காக, இதைப் பாதுகாப்பது ஒரு பெரிய பொறுப்பாகும். அதற்காக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால், மோடி அரசாங்கத்தின் நோக்கங்கள் எப்போது மாறக்கூடும் என்பது நமக்குத் தெரியாது. உலகளாவிய சக்திவாய்ந்த நாடுகளில், வயது வந்தோர் வாக்குரிமை இல்லாதபோதும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாதபோதுகூட, இந்தியாவில் பெண்கள் உட்பட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. பெண்களுக்கு இந்த உரிமையை, அரசியலமைப்புச் சட்டமும், காங்கிரசும் வழங்கியுள்ளன. இது நமது நாடு, சுதந்திரத்திற்குப் பிறகு, வயது வந்தோர் வாக்குரிமையை நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் வாக்குரிமை வழங்கினோம். இன்று நமக்குப் பாடம் எடுக்கும் ஆர்எஸ்எஸ் காரர்கள் தான் அன்று, வயது வந்தோர் அனைவருக்கும் ஆன வாக்குரிமையை எதிர்த்தார்கள் என்றால். உண்மை என்னவெனில், நாட்டிற்காக போராடாதவர்கள் எப்படி சுதந்திரத்தின் அர்த்தத்தை அறிவார்கள்? இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

Related Post