சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணிகளில் மாற்றங்கள் நடக்கக்கூடுமா? தவெக தலைவர் விஜய்யின் திட்டம் என்ன? அதிமுக வேறு கூட்டணியை அமைக்குமா? என பல கேள்விகள் அரசியல் களத்தில் நிலவி வரும் நிலையில், அதுகுறித்து நமது ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி அளித்திருக்கிறார் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.
திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்று தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நாள்தோறும் திமுகவை தாக்கிப் பேசி வருகிறார். திமுக சின்னத்தில் போட்டியிட்டேன், கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக மக்கள் பிரச்சனையில் சமரசம் செய்து கொண்டு என்னால் இயங்க முடியாது எனக் காட்டமாகக் கூறி வருகிறார்.
ஆக, திமுக கூட்டணியில் உடைப்புகள் ஏற்படுவது நிச்சயம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை, தமிழக அரசியல் களத்தில் பல கூட்டணி கட்சிகளைப் பிய்த்துப் போடும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணி மாற்றங்கள் நடந்தால், எந்தெந்தக் கட்சிகள் யார் பக்கம் சேர வாய்ப்புள்ளது, 2026 சட்டசபை தேர்தல் களம் எப்படி இருக்கும் என பலரும் விவாதித்து வருகின்றனர். அந்தவகையில், நமது ஒன் இந்தியாவுக்கு மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதனை இனி பார்க்கலாம்.
பாண்டே பேட்டி
ரங்கராஜ் பாண்டே பேசுகையில், “தவாக தலைவர் வேல்முருகன் 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார். அவர் திமுக கூட்டணியை விட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்கிறார். அவர் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இன்னும் ஓராண்டு பதவிகாலம் இருக்கும்போது அவர் ராஜினாமா செய்தால் தொகுதி மக்களிடம் நற்பெயரைப் பெறுவார்.
விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. தவெக தலைவர் விஜய் வலுவான கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இல்லாத ஒரு அணியை அமைப்பது குறித்தும் பேச்சுகள் நடந்து வருகின்றன.
எடப்பாடி திட்டம்
எடப்பாடி பழனிசாமி, விஜய்யுடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பார். அவர் வரவில்லை என்றால் சீமானை சேர்க்க முயற்சிப்பார். அவரும் வரவில்லை என்றால் பாமகவுடன் கூட்டணிக்கு முயல்வார். அதுவும் நடக்கவில்லை என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேசுவார். அதுவும் இல்லை என்றால் பாஜகவுடன் பேசுவார்.
திமுக கூட்டணி உடையாமல் வேறு யாருக்கும் வெற்றி இல்லை. அதிமுக இல்லாமல் ஒரு கூட்டணியால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியாது. 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாதக, தவெக என 5 முனை போட்டி ஏற்பட்டால் தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி.
அதிமுக - தவெக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி, விஜய்யுடன் சேர்ந்துவிட்டால் அவருக்கு பாஜகவோ வேறு யாருமோ தேவையில்லை. தவெக இணைந்துவிட்டால் அதிமுக பலமான கூட்டணியாக இருக்கும். அதிமுக நம்மைத் தேடி வரவேண்டும் என நினைக்கிறார் விஜய். அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு அவர் செல்லவில்லை.
அதிமுக பெரிய கட்சியா, தவெக பெரிய கட்சியா என்றால் அது குழந்தைக்கு கூட தெரியும். அதிமுகவின் தலைமையை ஏற்றுத்தான் விஜய் போகவேண்டி இருக்கும். அவற்றில் என்ன டிமாண்ட் இருக்கும் என்பதெல்லாம் தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும். விஜய் இருப்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய பலம் என்பதால் உத்தரவாதமான வெற்றிக்கு கூட வாய்ப்பு உண்டு. அதற்காக எடப்பாடி பழனிசாமி நிறைய விட்டுக் கொடுக்கவும் கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.