செங்கோட்டை டூ திருப்பூர்.. மதுரையை தாண்டிய அரசு பஸ், வாழ்வின் கடைசி நிமிடத்திலும் உருக வைத்த டிரைவர்

post-img
மதுரை: தென்காசி மாவட்டம் புளியரையைச் சேர்ந்த சிவக்குமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் செங்கோட்டையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வந்தார். நேற்று இவருக்கு ஓடும் பஸ்சில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனால் அந்த சூழலிலும் 44 பயணிகளை காப்பாற்றிவிட்டு தனது உயிரைவிட்டார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். பேருந்து ஓட்டுநர்களுக்கு திடீரென ஏற்படும் நெஞ்சுவலியால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அடிக்கடி ஏற்படுகிறது. அதேநேரம் தங்கள் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல், சாகும் தருவாயிலும், பயணிகளை காப்பாற்றிவிட்டே டிரைவர்கள் உயிரைவிடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் புளியரை அம்பல தெருவை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (வயது 51). சிவக்குமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு சூரியகலா (44) என்ற மனைவியும், கார்த்திகேயன் (21), பாலகிருஷ்ணன் (19) ஆகிய 2 மகன்களும் இருக்கிறார்கள். சிவக்குமார் கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று மதியம் 3 மணி அளவில் செங்கோட்டையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச்சென்றார். அதே பேருந்தில் தென்காசி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் கண்டக்டராக இருந்தார். சிவக்குமார் அரசு பேருந்தை செங்கோட்டையில் பிற்பகல் 3 மணிக்கு எடுத்த நிலையில். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தார். அந்த பேருந்தில் 44 பயணிகள் இருந்தனர். பேருந்து அதன்பிறகு சிறிய ஓய்விற்கு பிறகு புறப்பட்டு மதுரையை அடுத்த வாடிப்பட்டியை கடந்து இரவு 11 மணி அளவில் சிவக்குமார் அரசு பேருந்தை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் ஆண்டிபட்டி பங்களா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் சிவக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சின் வேகத்தை குறைத்து சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். பின்னர் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கண்டக்டர் பாலசுப்பிரமணியிடம் கூறியிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சிவக்குமாரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கண்டக்டர் பாலசுப்பிரமணி அழைத்துச்சென்றார். மருத்துவமனையில் சிவக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்தபோதும் பயணிகளை காப்பாற்றிவிட்டு, டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post