பூனை வேணுமா? நான் வேணுமா? கோர்ட்டுக்கு ஓடிய மனைவி.. விழித்த கணவர்.. கர்நாடக நீதிபதி உத்தரவை பாருங்க

post-img
பெங்களூர்: விநோத வழக்கு ஒன்று கர்நாடக மாநில ஹைகோர்ட்டில் நடந்துள்ளது.. இது சம்பந்தமான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த வழக்குதான் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது. நீதிமன்றங்களில் ஒவ்வொரு நாளும், பலவிதமான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இவைகளில் விசித்திரமான வழக்குகளும் அவ்வப்போது நடந்துவிடுகின்றன.. அந்தவகையில், கர்நாடகா மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது. கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இந்த தம்பதி வசித்து வருகிறார்கள். திடீரென மனைவி, கணவர் மீது வரதட்சனை புகார் ஒன்றை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல், அந்த புகார் மனுவில், கணவர் தன்னைவிட வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாகவும், அந்த பூனையிடமே அதிக நேரம் செலவிடுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் கணவர், ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "என் மனைவி என் மீது பொய்யான புகாரை தந்துள்ளார்.. நானும், என்னுடைய பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, போலீசில் இந்த புகாரை என் மனைவி அளித்துள்ளார். எனவே, போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். செல்லப்பிராணி: இந்த வழக்கு விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி சொல்லும்போது, "இந்த வழக்கில் கணவர் மீது மனைவி அளித்திருந்த வரதட்சணை கொடுமை புகாரில், அவர்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணியான பூனை தொடர்பாக, தம்பதியிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. அந்த பூனையை பற்றி, புகாரின் ஒவ்வொரு பாராவிலும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, பூனையால், அந்த பெண்ணுக்கு பல முறை கீறல்கள் ஏற்பட்டதாகவும், பலமுறை தொந்தரவுகள் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இதையெல்லாம் வரதட்சணை கொடுமையாக கருத முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டோர் மீது 498 A பிரிவின் கீழ் விசாரணை நடத்த முடியாது. இதுபோன்ற சில வழக்குகளால் தான், மற்ற வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படுகிறது. சட்ட துஷ்பிரயோகம்: குற்றச்சாட்டின் முக்கிய அம்சம் ஒரு வளர்ப்பு பூனை சம்பந்தமான சண்டையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது சட்ட துஷ்பிரயோகமாகும். இது போன்ற அற்ப வழக்குகள் தான், இன்றைய குற்றவியல் நீதி அமைப்பை அடைத்து கொண்டிருக்கின்றன. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றால், நிலுவையில் உள்ள வழக்கில், ஒரு வழக்கு அதிகரிக்கும். அதனால், குற்றம் சாட்டப்பட்டோர் மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது... புகார் அளித்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டு, அந்த பெண்ணின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Related Post