கோவை: டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அம்பேத்கர் குறித்து பேசிய அமித் ஷாவின் கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கோவையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசியல் சாசனம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவையிலும் விவாதம் நடைபெற்றது. மக்களவை விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலங்களவை விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளித்தனர். அப்போது அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அமித்ஷா பேசும்போது, "தற்போதைய அரசியலில் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர். அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும். இருப்பினும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டும்." என்றார்.
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டணங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது, தீர்மானம் கொண்டு வருவது என்று தங்களின் கண்டனத்தால் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் திமுக, விசிக, காங்கிரஸ் தமிழ்ப் புலிகள், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள் அமித்ஷாவின் உருவ பொம்மை, புகைப்படத்தை எரித்தும், ரயில் மறியலில் ஈடுபட்டும் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரத்தின் முக்கிய இடங்களில், சினிமா பாணியில் "அம்பேத்கர தொட்ட, நீ கெட்ட" என்ற வார்த்தைகளோடு திமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்துள்ளார், அரசியலமைப்பை அவமதித்துள்ளார். அவரது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், அம்பேத்கரின் அரசியலமைப்பை மதிக்க விரும்பவில்லை என்பதை இந்த செயல் வெளிப்படுத்துகிறது என்று கூறி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், "மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்." என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், "புரட்சியாளர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தான் அவமதித்தது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு கூட காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதைத்தான் அமித்ஷா அம்பலப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை திசை திருப்புகிறார்கள் என்று பிரதமர் கூறியிருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?. எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என்று தெரிவித்திருந்தார்.