தெரிஞ்சே தப்பு பண்றீங்க.. ரொம்ப சீக்கிரமே இதுக்கு வருத்தப்படுவீங்க..

post-img

சென்னை: இன்று திமுகவினர் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட திட்டப் பணிகள் திறப்பு விழாவிற்காக சென்றிருந்தார். அப்போது கீழ்கதிர்பூர் கிராம மக்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, திமுக எம்.எல்.ஏ எழிலரசனை முற்றுகையிட்டு எங்களுக்கு ஏன் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.


பெண்கள் சுற்றி நின்று சத்தம் போட்டு கேட்டதால் சட்டென்று கோபம் அடைந்த திமுக எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன், பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமற்றினார்களே.. மோடியை ஏன் போய் கேட்கவில்லை... அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே என பிரதமரை ஒருமையில் குறிப்பிட்டு ஆவேசமாக கேட்டார்.


திமுக எம்.எல்.ஏ எழிலரசன் பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு மற்றும் துணைத் தலைவர் ஜம்போடை சங்கர் தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகரை நேரில் சந்தித்து, பிரதமர் மோடியை இழிவாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ எழிலரசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

 


தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ எழிலரசனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாகவே, பாஜகவினர் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக கூறி திமுக அரசைக் கண்டித்துள்ளார் அண்ணாமலை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, ஒருமையில் தரக்குறைவாகப் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தமிழக பாஜக சகோதரர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கனிமொழி அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகள் மீது பாலியல் சீண்டல் செய்த திமுகவினரைக் கைது செய்வதில் காட்டாத வேகத்தை, பாஜகவினர் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதில் காட்டியிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.


இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினர், தங்கள் கடமையை மறந்து, திமுகவின் ஏவல்துறையாக முழுவதுமாக மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்று திமுகவினர் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Related Post