அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறைக்குச் சென்றார். அங்கு மருத்துவ உடையுடன் மாஸ் அணிந்தபடி இருந்த அமைச்சரை, நலம் விசாரித்தார். சற்று நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பாஜகவின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.