படம் பார்க்கும் நேரத்திற்கு மட்டும் காசு! PVR அறிவிப்பு பின்னணியில் செக் வைக்கும் செம பிளான் இருக்கே

post-img
சென்னை: பிரபல திரையரங்க செயின் அமைப்பான PVR Inox, திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய கட்டண முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய முறையின்படி, திரைப்படத்தை எவ்வளவு நேரம் பார்க்கிறோமோ, அந்த நேரத்திற்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது. திரைப்பட அனுபவத்தை மாற்றியமைக்கும் புதிய முயற்சியான இந்த திட்டத்தின் பெயர், "ஃபிளெக்சி ஷோ" (FLEXI). இதன் மூலம், பார்வையாளர்கள் தாங்கள் பார்த்த நேரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். ஃபிளெக்சி ஷோ, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வீடியோ பகுப்பாய்வு அமைப்புடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். டிக்கெட் கியூஆர் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டவுடன், திரையரங்கில் உள்ள கேமராக்களுடன் அது இணைக்கப்படுகிறது. இந்த கேமராக்கள் 99% துல்லியம் கொண்டவை. சீட்களில் இருக்கும் நபர்களை அவை ஸ்கேன் செய்துவிடும். எந்த இருக்கை காலியாக உள்ளது, எது நிரம்பியுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும். ஃபிளெக்சி ஷோ டிக்கெட் முறையில், நேர அடிப்படையிலான பணத்தைத் திரும்பப் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் திரைப்படத்தை விட்டு வெளியேறி பணத்தை பெற முடியும். படத்தின் 75% க்கும் அதிகமான நேரம் மீதமிருந்தால், டிக்கெட் விலையில் 60% திரும்பப் பெறலாம்; 50-75% மீதமிருந்தால், 50% திரும்பப் பெறப்படும்; மற்றும் 25-50% மீதமிருந்தால், 30% திரும்பப் பெறப்படும். குடும்ப அவசரம், பணி நிமித்தமான அழைப்பு அல்லது பிளான்களில் ஏற்படும் மாற்றம் என எதுவாக இருந்தாலும், ஃபிளெக்சி ஷோ பார்வையாளர்கள் தாங்கள் டிக்கெட் வாங்கியதற்கு முழு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த முயற்சி டெல்லி மற்றும் குர்கானில் உள்ள 40 திரையரங்குகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரெனால்ட் பல்லியேர், இந்த முயற்சி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ஃபிளெக்சி ஷோ என்பது சினிமா அனுபவங்களை வழங்கும் விதத்தில் ஒரு திருப்புமுனை. இன்றைய திரைப்பட பார்வையாளர்களின் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு இந்த முயற்சியை வடிவமைத்துள்ளோம். வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதை நாங்கள் உணர்கிறோம், சில நேரங்களில் பார்வையாளர்கள் படம் முடிவதற்கு முன்பு வெளியேற வேண்டியிருக்கலாம். ஃபிளெக்சி ஷோ மூலம், முழு டிக்கெட் விலையையும் செலுத்த வேண்டியதில்லை. 30 நிமிடங்கள் பார்த்தாலும் சரி, இரண்டு மணி நேரம் பார்த்தாலும் சரி, எவ்வளவு நேரம் பார்த்தீர்களோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்துவீர்கள். மீதமுள்ள தொகை, எவ்வளவு நேரம் மீதமிருந்தது என்பதைப் பொறுத்து திரும்பப் பெறப்படும்," என்று கூறினார். இந்த திட்டத்தை கேள்விப்பட்ட பலரும், "PVR எவ்வளவு தாராள மனசோடு இருக்காங்க?" என்று வியப்படைந்தாலும், உண்மை நிலவரம் வேறு. இந்த திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட பிரீமியம் கட்டணம் இருக்கும், அதாவது, திரைப்படத்தை பார்க்க தொடங்கும் முன்பே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். பின்னர், பார்த்த நேரத்திற்கு ஏற்ப அந்த தொகையில் இருந்து ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். இது போன்ற ஒரு முறை, சில ஆண்டுகளுக்கு முன், டிரைலர் பார்க்க ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்ததிலிருந்து தொடங்கியது. இதற்கு காரணம், திரைப்படத் துறையின் வருவாயில் பெரும்பகுதி கேண்டீன் மற்றும் பார்க்கிங் ஆகியவற்றிலிருந்து வருகிறது. அதாவது, திரைப்படம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், திரையரங்கிற்குள் நுழைந்தவர்கள் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு ஏதாவது வாங்கிவிடுகிறார்கள். தின்பண்டங்களில்தான் திரையரங்குகள் கொள்ளை லாபம் பார்க்கின்றன. வருவாயின் பெரும்பகுதி இங்கிருந்தே வருகிறது. இந்த புதிய கட்டண முறையும் இதே போன்ற ஒரு வியாபார தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, நேரடி கட்டண முறையை அறிமுகப்படுத்தி, திரையரங்கிற்குள் நுழைந்தவர்களை அதிகமாக செலவு செய்ய வைக்கவே இந்த முயற்சி. இந்த புதிய திட்டம் பற்றிய சிலரின் கருத்துக்கள், இது திரைப்படத் துறையின் வணிக நோக்கிற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தந்திரம் என்றே கூறுகின்றன. அதே சமயம், சிலர் இந்த திட்டம் நுகர்வோருக்கு ஒரு வகையில் நன்மை தரும் என்றும் வாதிடுகின்றனர். PVR-ன் இந்த புதிய கட்டண முறை, திரைப்படத் துறையில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது நுகர்வோருக்கு உண்மையிலேயே நன்மை தருமா அல்லது இது வெறும் வியாபார தந்திரமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Post