விஜய் மேடை.. மிஸ் செய்த திருமா.. கருணாநிதியாக இருந்தால்... மூத்த பத்திரிகையாளர் கா.சு. துரையரசு

post-img

சென்னை: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்காமல் தவிர்த்திருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். நடிகர் விஜய் இது குறித்து பேசுகையில், திமுக அழுத்தம் தந்தது என விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பில் கடுமையான பதிலடி தரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் கா.சு.துரையரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விகடன் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வில் திருமா அவர்கள் கலந்துகொள்வது எப்படி அரசியல் பேசுபொருள் ஆனதோ, அதேபோல அவர் கலந்துகொள்ளாமல் போனதும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இதுகுறித்த ஆதங்கத்தை அவர் மிக நீண்ட கடிதமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். அது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஒரு அனுபவம் பெற்ற கொள்கைத்தலைவர் இப்படி எதிர்வினை ஆற்றியிருக்கக்கூடாது.

இந்த இடத்தில் கலைஞரை வைத்து யோசித்துப்பாருங்கள். புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய் வருகிறாரே...அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டால் அரசியல் ரீதியில் என்ன ஆகுமோ என்றெல்லாம் அவர் யோசித்திருக்கவே மாட்டார். எவர் வழங்க, எவர் பெறுகிறார் என்பதும் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பதுபோலவே நடந்துகொண்டிருப்பார் (ஆனால் அதற்கு என்ன ஊசி போடவேண்டுமென்று அவருக்குத்தெரியும்).
கிடைத்த மேடையைத் தனதாக்கிக்கொள்ளும் கலை, கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்குக் கைவந்த ஒன்றாகும். போட்டி என்று வந்துவிட்டால் துள்ளிக்குதிப்பவர் அவர். ’பாசிசமும் பாயசமும்’ என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பேருரையை விகடன் மேடையில் அங்கு நிகழ்த்தியிருப்பார். ஐரோப்பாவில் பாசிசம் என்ன செய்தது என்று தொடங்கி, அகநானூறு, புறநானூற்றில் , சங்க இலக்கியங்களில் வெறுப்பு அரசியல் எத்தகையை பங்கை வகித்தது என்று முழங்கியிருப்பார். சமகாலத்தில் பாசிசத்தின் நவீன வடிவம் எப்படிப் பரிணமித்தது என்று படம்போட்டு விளக்கியிருப்பார்.

இன்றைய சூழலில் பாசிச, நாஜி கோட்பாடுகளின் நவீன வடிவங்களை எப்படி இனம்கண்டு எதிர்கொள்வது என்று அரசியலின் புதிய வரவுகளுக்குப் பாடம் எடுத்திருப்பார். விஜய் போன்ற இளம் அரசியல்வாதிகளுக்கு அது நிச்சயம் உதவிகரமாக இருந்திருக்கும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் கோட்டை விட்டுவிட்டீர்களே திருமா!. இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் கா.சு. துரையரசு தெரிவித்துள்ளார்.

Related Post