சென்னை: செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து விவாதிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மழைக்கால கூட்டத் தொடரின் போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிநிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா இந்த கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஜி20 மாநாட்டுக்கு மாநில முதல்வர்களுக்கு குடியரசு தலைவர் விருந்து வைக்க அழைத்தார்.
அந்த அழைப்பாணையில் President of India என்பதற்கு பதிலாக President of Bharat என குறிப்பிடப்பட்டிருந்தது. அது போல் பிரதமர், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் தங்கள் சமூகவலைதளங்களில் பயோவில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என மாற்றியிருந்தனர்.
அது போல் பிரதமர் நரேந்திர மோடியும் ஜி 20 மாநாட்டின் போது அவர் முன்புறம் இருந்த பெயர்ப்பலகையில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என எழுதப்பட்டிருந்தது. இந்த செயலை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் சிறப்பு கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனால் கடந்த மழைகால கூட்டத் தொடரை போல் இந்த சிறப்பு கூட்டத் தொடரும் புயலை கிளப்பும் வகையில் அமையும் என்றே தெரிகிறது. இந்த நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுக மக்களவை , மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, பொது சிவில் சட்டம், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
சனாதனம் குறித்து மத்திய அமைச்சர்களும் பாஜக ஆளும் மாநில பிரதிநிதிகளும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இது நாடாளுமன்றத்திலும் எழுந்தால் எப்படி பதிலடி கொடுப்பது, பாரத் என்ற பெயர் மாற்றம் குறித்து எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என தெரிகிறது.
மேலும் "இந்தியா" கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்ற எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்பதுகுறித்தும் ஆலோசிக்கப்படும். அது போல் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த எதிர்ப்புகளை எந்த வகையில் பதிவு செய்வது என்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது.