பெங்களூர்: எல்லோருக்கும் ஒருவித கனவு இருக்கும். எல்லோருக்கும் அது கைகூடாது. அதனால் குடும்பம், பொருளாதார சூழல் காரணமாக கிடைக்கின்ற வேலைக்கு சென்று வாழ்க்கையை நகர்த்துவார்கள். பெங்களூரில் ஒரு இளைஞர் ரேபிடோ பைக் ஓட்டுவதன் மூலம் மாதம் ரூ.85,000 வரை சம்பாதிப்பதாக கூறியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அப்படியே வேலை கிடைத்தாலும் உரிய சம்பளம் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. மறுபக்கம் வேலை கிடைத்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்போது லே ஆஃப் செய்வார்கள் என்ற அவலம் தொடர்கிறது. பணி பாதுகாப்பின்மை பலரின் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது.
பட்டதாரி இளைஞர்கள் பலரும், ஸ்விகி, ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களிலும், ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் பலரின் வெற்றிக் கதைகள் தன்னம்பிக்கையூட்டும் வகையில் வந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி பெங்களூரில் உள்ள ஒரு பைக் டாக்ஸி டிரைவரின் கதை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கர்நாடகா போர்ட்ஃபோலியோ என்ற எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பேசும் ஒரு இளைஞர், "நான் சராசரியாக ஒரு நாளுக்கு 12- 13 மணி நேரம் பணியாற்றுவேன்.இதன் மூலம் மாதம் ரூ.80,000 - 85,000 சம்பாதிப்பேன். ரேபிடோ, உபர் இரண்டிலும் மாறி மாறி ஓட்டுவேன். சிலர் எங்கள் பணியை பார்த்து சிரிப்பார்கள். கடினமான உழைப்பை போட்டால் நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் எந்த வேலையிலும் இப்படி சம்பாதிக்க முடியாது. எந்த வேலையிலும் இவ்வளவு சம்பளம் தர மாட்டார்கள். இதில் நன்கு சம்பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. யாரும் என்னை கேள்வியும் கேட்க மாட்டார்கள். எனக்கு தோன்றினால் வேலை செய்வேன். வேண்டாம் என்றால் நிறுத்திவிட்டு தூங்கிவிடுவேன்." என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள், "சமூகத்தில் நன்கு சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அதற்கு உழைப்பும், அர்ப்பணிப்பும் அவசியம். பெங்களூருவில் டாக்ஸி, பைக் டாக்ஸிகளுக்கு இருக்கும் தேவை அதிகம். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் மக்கள் எளிமையான, விரைவான போக்குவரத்துக்கு அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதை சரியாக பயன்படுத்தினால் எந்த அழுத்தமும் இல்லாமல் நன்றாக சம்பாதிக்கலாம். இவரின் கதை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் இவரைப் போல துணிந்து இறங்க வேண்டும். அவருக்கு அவர் தான் ராஜா.
பலர் நன்கு படித்துவிட்டு, அதற்கேற்ற வேலையோ, சரியான ஊதியமும் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். சிலர் அவர்களின் தோற்றத்தையும், செய்யும் வேலையையும் வைத்து தரக்குறைவாக நடந்து கொள்கிறார்கள். இந்த கண்ணோட்டம் மாற வேண்டும்." என்று கமென்ட் செய்துள்ளனர்.
இன்னும் சிலர், "இதை நம்பாதீர்கள், ரேபிடோ நிறுவனமே நூதன விளம்பரம் செய்து வேலைக்கு ஆள் தேடுகிறது. அந்த டிரைவருக்கு எதிரில் பேசுபவர் மேலோட்டமாக அல்லாமல் அவர் ஒரு நாளுக்கு எவ்வளவு டிரிப் எடுக்கிறார் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இளைஞர்களை ஈர்ப்பதற்காக இப்படி விளம்பரம் செய்யக் கூடாது. அவர் வருமான வரி செலுத்துகிறாரா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage