மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக், நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் கட்டி சிலை நிறுவி உள்ளார். இந்த சிலை 300 கிலோ எடை கொண்ட கருங்கல்லில, 3.5 அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் கொண்ட பற்றால் பலரும் கோவில் கட்டி சிலை அமைத்து கடவுள் போல் வழிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நாளை நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட உள்ளார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக், ரஜினிகாந்துக்காக கட்டியுள்ள கோவிலில் புதிய சிலையை நிறுவி உள்ளார். அதாவது கார்த்திக் நடிகர் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர். இதனால் ரஜினிகாந்துக்காக 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில்' ஒன்றை கட்டி உள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்தின் சிலையை நிறுவி வழிபாடும் நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ‛ரஜினி சதுர்த்தி டிசம்பர் 12' என்ற பெயரில் கார்த்திக் விழா நடத்தி வருகிறார். அதேபோல் நவராத்திரியை முன்னிட்டு ரஜினி இதுவரை நடித்த திரைப்பட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு அமைத்திருந்தார். தற்போது கோவிலில் 250 கிலோ எடையில் 3 அடி உயரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிலை இருந்தது. இந்த சிலைக்கு தான் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
நாளை ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் புதிதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கருங்கல்லில் 350 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை உற்சவ மூர்த்தியாகவும், பழைய சிலை மூலவராகவும் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிய சிலை என்பது மாப்பிள்ளை படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
இதுபற்றி முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் கூறுகையில், ‛‛நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ரஜினியின் உருவச் சிலையை வைத்து வழிபட்டு வருகிறேன். குறிப்பிட்ட சிலை ரஜினியின் உருவ அமைப்பில் 50 விழுக்காடு மட்டுமே பொருந்தி இருந்தது. இதனால் அவரது 74 வது பிறந்தநாளில் சிலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 26ல் 3 அடி 250 கிலோ எடையில் மூலவர் ரஜினிகாந்த் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை மூன்றரை அடி உயரத்தில் 300 கிலோ எடையில் உள்ளது. இந்த சிலைக்கு பஞ்சாமிர்த்தம், பூந்தி, பால், சந்தனம் உள்பட 8 வித அபிஷேகம் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் '' என்றார்.
இந்த ரஜினிகாந்தின் சிலையை விருதுநகரை சேர்ந்த ஸ்தபதி வடிவமைத்து கொடுத்துள்ளார். இதற்கு மொத்தம் ரூ.70 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. கடந்த 6 மாதங்களாக சிலை செதுக்கப்பட்டு இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பிறந்தநாள், அவரது திருமண நாள் என அனைத்து நாட்களையும் நாங்கள் இங்கே கொண்டாடி வருகிறோம்'' என்றார்.