டெல்லியில் ஆதரவாக ஓட்டு போட்டுட்டு இங்கே வந்து நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. விளாசிய ஸ்டாலின்!

post-img

சென்னை: சுரங்க மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் இன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏலங்களை எடுக்கக்கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சி எம்.பிக்கள் இருந்தார்கள். அவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான், முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒப்பந்தம் கோரிய போதே, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், இன்று அதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், அதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே செய்யவில்லை. ” எனப் பேசினார்.
அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “டங்ஸ்டன் சுரங்கம் மற்றும் கனிம வளம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது திமுக அன்றே எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு அறுதிப் பெரும்பான்மை காரணமாக மசோதாவை நிறைவேற்றியது” எனத் தெரிவித்தார்.
"நான் இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது.. அப்படி வந்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன்”: ஸ்டாலின்


அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, "இந்த விவகாரத்தில் திமுக, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினாலும், இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.” என்றார்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீங்களும் முதலமைச்சராக இருந்தவர் தான். அனைத்து விவரங்களையும் தீர்மானத்தில் கொண்டுவர முடியாது. நீங்க முதலமைச்சராக இருக்கும் போது எத்தனையோ கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி இருக்கிறீர்கள். அதில், ஒன்றாவது எங்களுக்கு கொடுத்து உள்ளீர்களா? மாநில அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடித்தை எப்படி உங்களுக்கு அனுப்ப முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.

சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.… pic.twitter.com/V1riWfa03l

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எங்கள் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் மதுரையில் நடைபெற்றபோது, அமைச்சர் மூர்த்தி நேரடியாக சென்றுபோராட்டத்தை நிறுத்துங்கள், உங்களுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் எனக் கூறி, முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார் என்பதை விளக்கி, தனி தீர்மானத்தை கொண்டு வரப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு போராட்டம் அப்போது கைவிடப்பட்டது.

நாடாளுமன்றம் கூடியதுமே அவை கலைந்து தான் செல்கிறதே தவிர, இன்னும் அங்கு கூட்டம் நடைபெற்றதாக செய்தி வரவில்லை. கிடைக்கும் சிறிய நேரத்தையும் பயன்படுத்தி, சுரங்கம் அமைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் மெஜாரிட்டி அவர்கள் தான் இருக்கிறார்கள். அதனால், சட்டம் நிறைவேறித்தான் ஆகும். நாங்கள் குரல் கொடுத்தால் மட்டும் சட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விடுவார்களா? எந்த விதத்திலும் திமுக ஆட்சி அலட்சியமாக இருந்தது இல்லை.” என ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது, நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் முதலமைச்சர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்" என உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Post