ஏலியன் கண்கள்..பாம்பு நாக்கு.. 13 லட்சம் செலவு.. ‘சினேக் பாபு’ ஹரிஹரனின் கொடுமைகள்

post-img
திருச்சி: நவீன நாகரிகம் என்ற பெயரில் நடத்து வரும் Body Modification என்றால் என்ன? அதில் என்னவிதமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன? திருச்சியில் டாட்டூ கடை நடத்திவந்த இளைஞர் ஹரிஹரன் கடந்த சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மற்றொரு நபரும் கைதாகி இருக்கிறார். இந்த ஹரிஹரன் சில ஆண்டுகளாகவே இன்ஸ்டா ரீல் மூலம் பிரபலமடைந்திருக்கிறார். அவரைப் பார்க்கும் போது சாதாரண மனிதனுக்கான எந்த அடையாளமும் இல்லை. உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். கண்கள் இரண்டும் நீல நிறத்தில் இருக்கின்றன. அவரது நாக்குகூட இரட்டைதான். ஒரு காலத்தில் இரட்டை நாக்கு உள்ளவர் நேர்மையற்றவன் என்று ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவியது. பிறவியிலேயே இப்படியான குறைபாடு உள்ளவர்களை வெறுத்து ஒதுக்கிய சமூகமாக நம் மாநிலம் இருந்துள்ளது. ஆனால், இன்றைக்குப் பணத்தைச் செலவு செய்து நாக்கை இரண்டாகப் பிளப்பது ஒரு நாகரீகமாக மாறி இருக்கிறது. மருத்துவ முறைப்படி பார்த்தால் அனைவரும் டாட்டூ போட்டுக் கொள்ள முடியாது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் டாட்டூ போட்டுக் கொள்வதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கலாம். அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பச்சை குத்தும் போது ஏற்படும் காயத்தால் பல பக்க விளைவுகள் வரலாம். டாட்டூ போட்ட பின் ரத்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஹெச்.ஐ.வி போன்ற நோய்த் தொற்றுகூட வரலாம். இந்த ஆபத்துகளை எல்லாம் உணர்ந்து பலரும் செய்கிறார்களா என்பது சந்தேகம். கைதாகி இருக்கும் ஹரிஹரன் தனது உடல் முழுக்க 45 இடங்களில் பச்சை குத்தி இருக்கிறார். இன்னும் பல இடங்களில் செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம். இவரை அதிகம் பாதித்தவர் பிளாக் ஏலியன். அடுத்து லில்லி லு. டாட்டூ உலகில் இவர்கள் பெரிய பிரபலங்கள். இந்த டாட்டூ கலாச்சாரம் என்பது பழையது. இன்றைய ட்ரெண்ட் வேறு. கண்களைப் பாம்புபோலவே நீலநிறத்தில் மாற்றி விடுகிறார்கள். அதற்காக ஒரு ரசாயன மையைக் கண்களில் ஊசி மூலம் செலுத்துவார்கள். அதேமாதிரியான சிகிச்சை மூலம்தான் ஹரிஹரன் வலது விழித்திரைக்குள் 6 முறை ஊசியால் நீல நிற திரவத்தைச் செலுத்திக் கொண்டுள்ளார். 7 முறை இடது கண்ணில் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை ஊசி செலுத்தும் போது 5 நிமிடங்கள் வரை வலி ஏற்படும் என்றும் அதன்பின் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று ஹரிஹரனே பல பேட்டிகளின் வாக்குமூலம் அளித்துள்ளார். இதேபோல் நாக்கை பாம்பு போன்று இரண்டாக வெட்டி விடுவதில்தான் ஹரிஹரன் பிரபலமடைந்திருக்கிறார். அது பற்றிய வீடியோ வைரலானதால் தான் இவரை காவல்துறை கைது செய்யத் துணிந்தது. இவரைப் பார்க்கவே சினேக் பாபு போன்றுதான் த்ரில் ஆக இருக்கிறார். முதலில் இந்த மாதிரி நாக்கை இரண்டாகப் பிறப்பதற்குப் பாம்பு நாக்கு என பெயர் இருந்துள்ளது. இப்போது அதை Tongue split என்று நவீன முறையில் குறிப்பிடுகிறார்கள். அதாவது நாக்குப் பிளவு. இதைப் போலவே உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். மிக நுட்பமாகப் பகுதிகளில் கூட டாட்டூ வரைவது ஒரு நாகரீகமான மாறிவிட்டது. காதுகளை ஏலியன் ஸ்டைலில் மாற்றும் அறுவைச் சிகிச்சை கூட நடத்தி இருக்கிறார் ஹரிஹரன். அவரது பல் வரிசையில் இரண்டு மட்டும் பேய் மாதிரி நீண்டுள்ளது. இதற்கு Vampire என்று பேயர். அதாவது காட்டேரி. அது ஸ்டீல் மூலம் செய்யப்பட்ட செயற்கை வடிவம்தான். 6 மாதங்கள் வரை கியாரண்டி என்றும் இவர் போகிற போக்கில் உத்தரவாதம் எல்லாம் கொடுத்து இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார். இதன் உச்சமாக மர்ம உறுப்புகளில் டாட்டூ போட்டுக் கொள்வதும் இன்றைய 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படி உடலைக் கொடூரமாக மாற்றுவதற்கு Body Modification என்று பெயரை வைத்திருக்கிறார்கள். தனது கண்களை ஹரிஹரன் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ செண்டரில் மாற்றிக் கொண்டுள்ளார். அவருக்கு இதைப் போட்டவர் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை. வெளிநாட்டிலிருந்த வந்த ஒருவர் இப்படி மாற்றி தந்துள்ளார். இந்தச் சிகிச்சை போது கண்களில் திரவத்தைச் செலுத்தும் போது கண் ஏற்றுக் கொள்ளாமல் உருகிவழிந்துவிட்டது என்று ஹரிஹரன் தன் அனுபவத்தை முன்பே பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தளவுக்கு விபரீத விளையாட்டுதான் இது என்பதை அறியாமல் அவர் இதைப் பிற இளைஞர்களை ஈடுபட வைத்திருக்கிறார் என்பது கொடுமை. இப்படி கண்களின் நீல மையை ஊசி வழியே செலுத்திய பின் 6 மாதம் வரை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் செய்துள்ளார். கண்களின் தொற்று ஏற்படாமல் இருக்கப் பலநாட்கள் பாதுகாப்பாக இருந்துள்ளார். இதைத்தாண்டி விரல்களை வெட்டிக் கொள்வதும் Body Modification என்கிறார்கள். ஏனென்றால் ஏலியன் மனிதர்களுக்கு 3 விரல்கள்தான் இருக்குமாம். அதற்காக இந்த விரல் கட்டிங். இதைப் படிக்கும் போது பயமாக இருக்கிறது. இவர்களுடன் எப்படிச் சேர்ந்து வாழ்வது? இப்படி உடல் முழுக்க டாட்டூ மற்றும் Body Modification செய்வதற்காக மட்டும் ஹரிஹரன் இதுவரை 13 லட்சம் செலவு செய்திருக்கிறார். இந்த மாற்றம் கடந்த 5 ஆண்டுகளாக நடந்துள்ளது. அவருக்கு இன்னும் பல விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் இருந்துள்ளது. அதற்காக அவர் மெக்சிகோ செல்ல இருந்தார். ஆனால், அதற்கு முன் அவருக்குத் திருச்சி சிறை திறந்துவிட்டது.

Related Post