மகாராஷ்டிரா தேர்தல் தோல்வி.. இவிஎம் மீது பழிபோடும் காங்கிரஸின் செயல்.. ஏன் தவறு தெரியுமா?

post-img

சென்னை: ஒரு தேர்தலில் வெல்லும் பட்சத்தில்.. அதை கொண்டாடுவதும்.. அதுவே தோல்வி அடையும் பட்சத்தில் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் முறைகேடு என்று இவிஎம் மீது பழிபோடுவதும் சமீப காலமாக எதிர்க்கட்சிகள் வழக்கம் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடைந்த தோல்வி காரணமாக மீண்டும் இவிஎம் மீது பழிபோட தொடங்கி உள்ளனர். அதிலும் இவிஎம் மீது தாங்கள் போடும் பழியை நிரூபிக்க மால்ஷிராஸ் தொகுதியில் உள்ள மார்கட்வாடி கிராமத்தில் வாக்கு சீட்டு முறையில் அனுமதி இல்லாமல் மறுதேர்தலும் கூட நடத்த முயன்று உள்ளனர்.
ஆம்.. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உத்தமராவ் ஜான்கர் மால்ஷிராஸ் தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம் சாட்புட்டேவை எதிர்த்து வென்றார். எதிர்க்கட்சிகள் இந்த தொகுதியில் வென்று இருந்தாலும் அதில் உள்ள மார்கட்வாடி கிராமத்தில் பாஜக வேட்பாளர் ராம் சாட்புட்டே எதிர்கட்சிகளை விட அதிக வாக்குகளை பெற்று இருந்தார். இதை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உத்தமராவ் ஜான்கர் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் தனது ஆதரவாளர்களுக்கு அழுத்தம் தந்து அதன் மூலம் அந்த கிராமத்தில் வாக்குசீட்டு முறையில் மறுதேர்தல் நடத்த முயன்றுள்ளனர். கடைசியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் எச்சரிக்கை விடுத்து இந்த முறையற்ற மறுதேர்தலை தடுத்து நிறுத்தினர். உள்ளூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் இந்த செயல் தவறானது என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

இவிஎம் எந்திரம்: காங்கிரசுக்கு கிடைத்த பலியாடு!
இவிஎம் எந்திரம் காங்கிரஸ் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.. இப்போது இதை நம்ப முடியாது, முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்றெல்லாம் சொல்லும் அதே காங்கிரசின் ஆட்சி காலத்தில்தான் இந்த எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதே எந்திரத்தை தற்போது தோல்வியின் போதெல்லாம் பலியாடு போல காங்கிரஸ் பயன்படுத்துகிறது. மார்கட்வாடி கிராமத்தை சேர்ந்த ஜெயேஷ் என்பவர் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் தானே இதை அறிமுகம் செய்தது.. அதில் நம்பகத்தன்மை இல்லை என்றால் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதே மாநிலத்தில் காங்கிரசின் மகா விகாஸ் அகாடி கூட்டணி லோக்சபா தேர்தலில் வென்ற போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை குறை சொல்லவில்லையே.. இப்போது மட்டும் ஏன் சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டு: மார்கட்வாடி கிராமம்
மார்க்கட்வாடி கிராமத்தின் அரசியல் களநிலவரம்தான் ஜனநாயகத்திற்கும்.. மக்களின் மனநிலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. பாஜகவின் ராம் சாட்புட்டே ஒட்டுமொத்தமாக தொகுதியில் தோல்வியடைந்தாலும் அந்த குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் வென்றார். அவரது வளர்ச்சிப் பணிகளால் கிராமத்தில் கணிசமான ஆதரவை பெற்றார்.
அந்த கிராமத்தை சேர்ந்த கௌஷல் போன்ற கிராமவாசிகள் ராம் சாட்புட்டேவை ஏன் ஆதரித்தோம் என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். கிராமத்தை முன்னேற்றவும், அங்கே சுற்றுலா மையத்தை நிறுவுவதற்கும், இப்பகுதிக்கு குறிப்பிடத்தக்க நிதியை கொண்டு வருவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அசாத்தியமானவை என்று பாராட்டி உள்ளார். இதன் காரணமாகவே அந்த கிராமத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உத்தமராவ் ஜான்கரரை விட பாஜக ராம் சாட்புட்டே 150 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளார், என்று அவர் கூறினார்.

முக்கியமாக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான லட்கி பஹின் யோஜனா அந்த கிராம மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக மொத்தமாக மாநில அளவில் வாக்காளர்களின் ஆதரவை பாஜக பெறுவதில் முக்கிய பங்காற்றியது. மார்க்கட்வாடி கிராமத்தை சேர்ந்த ஓங்கார் அளித்த பேட்டியில், "நாம் மீண்டும் வாக்குச்சீட்டுக்கு மாறினாலும், தவறுகள் நடக்காது என்று சொல்ல முடியுமா?. வாக்கு சீட்டுகள் முறையில் நடந்தாலும் கூட லட்கி பஹின் யோஜனா போன்ற திட்டத்தின் தாக்கத்தை யாரால் தடுக்க முடியும்? என்று குறிப்பிட்டு உள்ளார்.
அரசியல் சந்தர்ப்பவாதம் vs களநிலவரம்
எதிர்க்கட்சிகள் வைக்கும் இவிஎம் முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று விமர்சனம் வைக்கிறார் அந்த கிராமத்தை சேர்ந்த மிதுன் என்ற கிராமவாசி. அதன்படி, பிரச்சினைகள் இருந்தால், லோக்சபா தேர்தலின் போது அவர்கள் ஏன் அவற்றை எழுப்பவில்லை? வெற்றிபெறும்போதெல்லாம் ஏன் அதை பற்றி பேசவில்லை. அவர்களின் இந்த விமர்சனங்கள் அரசியலமைப்பிற்கு எதிரானது. அவர்களுக்கு எதிராகவே இந்த விஷயங்கள் திரும்பி உள்ளன, என்று கூறியுள்ளார்.
"தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரின் ஆட்சி, ஊழலற்ற திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான நலத் திட்டங்கள் மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கும் வந்துள்ளனர்.. அந்த அடிப்படையில்தான் எங்கள் கிராமத்திலும் அவர்களுக்கு வாக்குகள் கிடைத்தன" என்று ஆதேஷ் குப்தா என்ற மார்கட்வாடி கிராமவாசி தெரிவித்துள்ளார்.
முறைகேடு இல்லை : வெளிப்படைத்தன்மை மட்டுமே
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்குப்பதிவு எந்திரம் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை கூர்ந்து ஆராயும் போது அது எந்த அளவிற்கு பொய்யானது என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் சொல்வது போல மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு இருந்தால் லோக்சபா தேர்தலின் போது இந்த ஆட்சேபனைகள் ஏன் வெளிவரவில்லை? முடிவுகள் சாதகமாக வந்தால், அது ஏற்கத்தக்கது. அப்படி இல்லாமல் முடிவுகள் எதிராக வந்தால் மட்டும் அவர்கள் புகார் செய்கின்றனர். மக்களின் மனநிலை தெரியாமல்.. அவர்களுடன் நெருக்கமாக இல்லாமல்.. வெறுமனே சதி செய்துவிட்டார்கள் என்று மட்டும் சொல்வது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுக்கு வழக்கமாகிவிட்டது.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்:
மார்கட்வாடி கிராமத்தில் மறுதேர்தல் நடத்தும் இவர்களின் திட்டம் தவறானது. அது மட்டுமல்ல.. பொய்யான ஒரு பிரச்சாரம், தவறான ஒரு பிரச்சாரம் எப்படி எல்லாம் மக்களை குழப்புகிறது, ஏமாற்றுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இப்படி எல்லாம் எதிர்க்கட்சிகள் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மார்கட்வாடி கிராம மக்கள் வளர்ச்சியை மனதில் வைத்து வாக்களித்துள்ளனர்.
அந்த கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் கூறுகையில், இவிஎம் முறைகேடு செய்யப்பட்டு இருந்தால் எங்கள் கிராமத்தில் என்று இல்லை மொத்தமாக எங்கள் தொகுதியிலேயே பாஜக தானே வென்று இருக்க வேண்டும். ஏன் வெல்லவில்லை. இந்த தொகுதியில் தோற்ற பாஜக கூட இவிஎம் பற்றி புகார் சொல்லவில்லையே? எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளை மதிக்க வேண்டும்., என்று கூறியுள்ளார்.
முக்கியமாக, அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடைமுறைக்கு மதிப்பளித்து, மக்களின் பிரச்சனைகளை மட்டும் தீர்ப்பதில் கவனம் செலுத்தும்போது ஜனநாயகம் பாதுகாக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்துள்ளனர்.. அதை மதிப்பது அனைத்து கட்சிகளின் கடமை!

Related Post