திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாழவேடு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை பார்த்த ஒருவரின் கையையும் அந்த போதைக் கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறது. கஞ்சா போதையில் கொலை செய்த 3 பேரையும் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். . கஞ்சா விற்பனை குறித்து புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக் தகவல் கொடுத்ததாலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் இனிமேல் கஞ்சாவே இல்லை என்கிற நிலையை உருவாக்க அரசு தரப்பிலும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுகப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலையில் தொடர்புடைய 3 பேரையும் பிடிக்க காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை கைது செய்ய பின்னர் நடத்தப்படும் விசாரணையின் மூலம் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.