மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. அம்பேத்கர் சர்ச்சைக்கு நடுவே அமித்ஷா அறிவிப்பு

post-img
டெல்லி: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மகிழ்ச்சி என்றால் நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் காங்கிரஸ் இப்போது இருக்கும் இடத்தில் தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆக்ரோஷமாக கூறியுள்ளார். ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அதாவது "எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்" என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா உள்ளிட்ட 2 சபைகளிலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியது. அம்பேத்கரை, அமித்ஷா அவமானப்படுத்தி உள்ளார். அவரை மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதோடு அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றன. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. அமைச்சரவையில் இருந்து அமித்ஷாவை நீக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளனர். அதோடு மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அமித்ஷாவை நீக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டத்தை நடத்த உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் நடந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அம்பேத்கர் குறித்த கருத்து தொடர்பாக என்னை பற்றி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவதூறு பரப்பி வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வது பற்றி சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசிக்கப்பட உள்ளது. கார்கே என்னிடம் ராஜினாமா கேட்கிறார். அவருக்கு மகிழ்ச்சி என்றால் நான் எனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சி ஒன்றை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இப்போது இருப்பது போலவே 15க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு இருக்க வேண்டியிருக்கும். இதனால் தற்போது என்னுடைய ராஜினாமா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்பபோவது இல்லை. தற்போது லோக்சபா, ராஜ்யசபாக்களில் அரசியலமைப்பு பற்றி விவாதம் நடநத்தப்பட்டது. அதற்கு காங்கிரஸ் கட்சியால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அம்பேத்கர், சாவர்க்கர், இடஒதுக்கீட்டை வைத்து விமர்சனம் செய்கின்றன. காங்கிரஸ் கட்சி உண்மையின் அடிப்படையில் என்னை விமர்சனம் செய்தால் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்த கட்சி உண்மையான பேச்சை எடிட் செய்த வீடியோவை வைத்து தவறான அர்த்தம் கற்பித்து வருகிறது. மீடியாக்கள் மக்களிடம் உண்மையை கொண்டு செல்ல வேண்டும். உண்மை என்னவென்று ராஜ்யசபா பதிவேட்டில் உள்ளது. அம்பேத்கரை உண்மையில் யார் அவமதித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது என் பெயரை பயன்படுத்தி மக்களிடம் தவறான தகவலை பரப்ப முயற்சிக்கின்றனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சப்போர்ட் செய்ய வேண்டாம் கார்கேவிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்து கொள்ள விரும்பிகிறேன். ஏனென்றால் அம்பேத்கர் உயர்த்தி விட நினைத்த பிரிவில் இருந்து அவர் வந்தவர். தற்போது ராகுல் காந்தியால் கார்கேவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று விமர்சனம் செய்தார்.

Related Post