கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சம்பவமும், மதுரை பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சம்பவமும், ஒட்டுமொத்த பதிவுத்துறையை கலங்கடித்து வருகிறது. இதையடுத்து, பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இன்றைய தினம் தங்களது போராட்டத்தையும் நடத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருகி கொண்டிருக்கிறது.. உயர் பதவியிலுள்ள அரசு துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகி வருகிறார்கள். பதிவுத்துறை, வருவாய்த்துறைகளில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதில், பெண் அதிகாரிகளும் கைதாவது தமிழக மக்களுக்கு கவலையை தந்து கொண்டிருக்கிறது.
போலி ஆவணங்கள்: போலி ஆவணங்களை ஒரிஜினல் பத்திரம் போலவே தயார் செய்து, அவைகளை வைத்து நிலமோசடிகள் அதிகரித்து வருகின்றன. இவைகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும்நிலையில், பதிவுத்துறையிலேயே சில அதிகாரிகள் கைதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பதிவுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பும் இல்லாமல் போய் கொண்டிருப்பது அதற்கு மேல், பரபரப்பை தந்து வருகிறது.
ஏனென்றால், சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்வதற்காக, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகம் செல்ல நேரிடுகிறது.. ஆனால், சில சார் பதிவாளர்கள், அங்கு வரும் மக்களை அலைக்கழிப்பதாக புகார் எழுகிறது.. இதனால், பல இடங்களில், பொது மக்களுக்கும், சார் - பதிவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துவிடுகிறது.
கன்னியாகுமரி: இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் ஒரு கொடுமை நடந்தது.. சுண்டவிளையை சேர்ந்த ஜஸ்டஸ் மார்ட்டின் என்பவர் தன்னுடைய 1 சென்ட் நிலத்தை, பதிவு செய்யுமாறு கருங்கல் சார்பதிவாளர் அரிகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சார் பதிவாளர், புதிய விதிமுறைகள் அமலின்படி, நிலத்தை நேரடியாக பதிவு செய்ய முடியாது, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஆய்வு நடத்தி அறிக்கை தந்த பிறகுதான் பதிவு செய்து தர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜஸ்டிஸ், சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்த பெட்ரோல் பாட்டிலை கொண்டு சென்றார்.. அங்கிருந்த சார் பதிவாளர் அரிகிருஷ்ணன் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்கள் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு, தனக்கு தானே தலையிலும் ஊற்றிக் கொண்டார். பிறகு தீப்பெட்டியை எடுத்து ஜஸ்டிஸ் மார்ட்டின் பற்ற வைக்க முயன்றார்.. ஆனால், அதற்குள் அங்கிருந்தவர்கள் ஜஸ்டிஸ் மார்ட்டினை வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பேரையூர்: அதேபோல, மதுரை மாவட்டம் பேரையூர் சார் - பதிவாளர் அலுவலகத்திலும், பத்திரத்தை பதிய மறுத்த சார் - பதிவாளரை, ஒரு நபர் தாக்கியதில், அவரது மண்டை இரண்டாக உடைந்தது. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது... அதேசமயம் பதிவுத்துறையே இந்த சம்பவங்களில் கதிகலங்கி போயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு பதிவுத்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இதுகுறித்து, தமிழக பதிவுத்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "பதிவுத்துறையில், பதிவு அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த மேடைகள், தற்போதைய அரசால் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்பின், சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடமையை ஆற்றும் போது, நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
கருப்பு பேட்ஜ்: இதனால், மகளிர் உள்ளிட்ட பதிவு அலுவலர்களுக்கு, பணி செய்யவே, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது, பதிவுத்துறை அலுவலர்களுக்கு கவலை அளிக்கிறது. எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி, இன்று அனைத்து சார் - பதிவாளர் அலுவலகத்திலும், அலுவலர்கள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர்" என்று அறிவித்திருந்தனர்.
நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகிவரும் நிலையில், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அலுவலர்கள் விடுத்திருக்கும் இந்த கோரிக்கையானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage