அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்களை கொண்ட நகரங்களின் பட்டியலை Henley & Partners என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் கோடீஸ்வரர்கள், பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள் மற்றும் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள் என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் , அதிக அளவில் சொத்து கொண்டவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அந்த பட்டியல் சொல்கிறது. கோடீஸ்வர்கள் என்றால் ஒரு மில்லியன் டாலர் வைத்துள்ளவர்கள், அதாவது இந்திய மதிப்பில், 8.3 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த பட்டியலில், அமெரிக்காவின் நியூயார்க்கில், 3.4 லட்சம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அதில் 724 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 58 பேர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது இந்த பட்டியலில் இருப்பது ஜப்பானின் டோக்கியோ. இங்கு, 2.9 லட்சம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 250 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 14 பேர் பல ஆயிரம் கோடிக்களுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் வருவது லண்டன். இங்கு, 2.58 லட்சம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 384 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 36 பேர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்திய நகரங்கள் உள்ளனவா என்பது தான் உங்கள் கேள்வி என்றால், ஆம் சில இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளன. 21வது இடத்தில் மும்பையும், 36 வது இடத்தில் டெல்லியும், 60வது இடத்தில் பெங்களூருவும், 63வது இடத்தில் கொல்கத்தாவும், 65வது இடத்தில் ஹைதராபாத்தும் உள்ளன.
மும்பையில், 59, 400 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 238 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 29 பேர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, டெல்லியில் 30,200 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 121 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 16 பேர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 12,600 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 50 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 8 பேர் பல ஆயிரம் கோடிக்களுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 11 ஆயிரத்து 100 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 40 பேர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றும், 5 பேர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.