சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.
"அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இந்த அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2021-22ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்காக ஐஐடி சென்னை, என்.ஐ.டி, என்.எல்.யூ மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். 2023-24ஆம் கல்வியாண்டில் ஐஐடி, என்.ஐ.டி, ஐஐஐடி, என்.ஐ.எஃப்.டி.இ.எம், ஜி.எஃப்.டி.ஐ.எஸ், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய கடற்சார் பல்கலைக்கழகம், தேசிய சட்ட பல்கலைக்கழகம், தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனம், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐஎஸ்சி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு 2022ல் 13.41 லட்ச ரூபாய் (18 மாணவர்கள்), 2023ல் 97.67 லட்ச ரூபாய் (74 மாணவர்கள்), 2024ல் 5.11 கோடி ரூபாய் (333 மாணவர்கள்) என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 2024-25ஆம் கல்வியாண்டில் 6.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.