டெல் அவிவ்: காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே மத்திய காசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது.
கடந்த 10 நாட்களாக இரு தரப்பிற்கும் இடையே யுத்தம் தொடரும் நிலையில், இந்த காலகட்டத்தில் அரங்கேறிய மிகக் கொடூரமான தாக்குதலாக இது இருக்கிறது.
மோசமான தாக்குதல்: இந்தத் தாக்குதலில் 300 முதல் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய காசாவில் உள்ள இந்த அல்-அஹ்லி மருத்துவமனை மீது குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தது. அதாவது இது எதிர்பாராமல் நடந்த தாக்குதல் இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
ஏனென்றால், இதற்கு முன்பே காசா பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் அறிவித்திருந்தது.. இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்தது. அப்படி இஸ்ரேல் எச்சரித்த பகுதிகளில் ஒன்றில் தான் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. எனவே, இஸ்ரேல் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டே நடத்தியதாகப் பாலஸ்தீனம் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தது.
உலக நாடுகள்: உலகின் பல்வேறு நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுவாக என்ன தான் இரு நாடுகளுக்கும் இடையே போரில் என்றாலும் மருத்துவமனை போலப் பொதுமக்கள் இருக்கக் கூடிய இடங்களில் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஆனால், அதையும் தாண்டி முழுமையாகச் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பரபரப்பைக் கிளப்பியது. இதற்கு அரபு நாடுகள், கனடா உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் சர்வதேச ஊடகமான பிபிசி-க்கு விளக்கமளித்துள்ளார். அதில், "மருத்துவமனை சென்சிடிவ்வான கட்டிடம்.. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் இலக்காக அவை ஒருபோதும் இருந்ததே இல்லை. இந்தத் தாக்குதல் எங்கிருந்து நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
விளக்கம்: இந்தச் சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். பயங்கரவாத அமைப்பு ஒரு தகவலைப் பகிரும் போது அதை எச்சரிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல இஸ்ரேல் பிரதமரின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ் இது தொடர்பாகக் கூறுகையில், "இஸ்ரேல் ராணுவத்தின் டாக்கெட்டாக மருத்துவமனைகள் ஒரு போதும் இருந்ததே இல்லை. எனக்கு இப்போது உயர் அதிகாரியிடமிருந்து தகவல் கிடைத்தது. தற்போது வரை கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது.. இது இஸ்ரேலின் தாக்குதலாகத் தெரியவில்லை. மாறாக இது ஹமாஸ் அனுப்பி. ஏவுகணையைப் போலவே இருக்கிறது.
பரபர குற்றச்சாட்டு: கடந்த காலங்களிலேயே நாம் பார்த்துள்ளோம். ஹமாஸ் அனுப்பும் ஏவுகணைகளில் சராசரியாக 33% ராக்கெட்டுகள் காசா பகுதியிலேயே விழுந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் நடந்திருக்கலாம். காசா மருத்துவமனையில் தாக்குதல் நடந்த இதே நேரத்தில்தான் மத்திய இஸ்ரேலைக் குறிவைத்து ஹமாஸ் ஏவுகணையை வீசி இருந்தது. இதனால் டெல் அவிவில் சைரன் அலர்ட் எல்லாம் கூட வந்தது.
ஹமாஸ் படை தான் எங்களை நோக்கி ஏவுகணையை அனுப்பினர். அந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கவில்லை. அப்போது அந்த ஏவுகணை எங்கே போனது? எதைத் தாக்கியது என்பதே கேள்வி. இஸ்ரேல் மக்களை அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்ற கருத்தை உலகெங்கும் பரப்ப ஹமாஸ் விரும்புகிறது. எனவே, இந்த தகவலை நாம் எச்சரிக்கையுடன் தான் அணுக வேண்டும்" என்றார்.