வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் ஊதியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் நாசாவில் விண்வெளி வீரர், வீராங்கனைகளின் மாத சம்பளத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்வெளி துறை என்பது விந்தையான துறை! பூமி, ஆகாயம், சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் என அனைத்து அற்புதங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் துறை. அவற்றின் செயல்பாடுகள், அவற்றின் சாதக பாதகங்களை அறிவது என இந்த துறையின் சாதனைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.
நிலவின் தென் துருவத்தில் இந்தியா காலடி எடுத்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல்கல்லை அடைந்துள்ளது என கூறலாம். இவை அத்தனைக்கும் பின்பு உழைப்பு உழைப்பு என ஒன்று உள்ளது. அதிலும் கூட்டு உழைப்பு!
மற்ற கிரகங்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட விண்வெளி விஞ்ஞானிகள் பாடுபடுகிறார்கள் என்றால் அந்த கிரகங்களுக்கே சென்று ஆய்வுகளை விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் வான்வெளியில் உள்ள நாசா ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி உள்ளது. மூன்றாவது இடத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உள்ளது. இவை தவிர்த்து இந்தியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் விண்வெளித் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
நாசா: நாசா விண்வெளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆண்டு ஊதியமாக 70 லட்சம் முதல் 95 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. நாசாவில் உள்ள ராணுவ விண்வெளி வீரர்கள் பல ஆண்டுகள் சேவை புரிந்திருக்க வேண்டும், பறக்கும் அனுபவம் இருத்தல் வேண்டும் உள்ளிட்ட சிலவற்றை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.அப்படி செய்திருப்போருக்கு ஊதியம் அதிகமாக கிடைக்கும்.
அமெரிக்க வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது 8 நாட்கள் பயணமாக சென்ற இருவரும் அங்கேயே உள்ளனர்.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.
சுனிதாவின் அனுபவத்தை பொருத்து அவருக்கு ஆண்டுக்கு 1.46 லட்சம் டாலர்கள் கிடைக்கும் என தெரிகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 1கோடியே 24 லட்சத்து 67 ஆயிரத்து முன்னூற்று எழுபத்தி நான்கு ஆகும். சுனிதா வில்லியம்ஸுக்கு ஊதியம் மட்டும் இல்லாமல் வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மருத்துவ காப்பீடு, பயிற்சி, மனநல ஆலோசனை, குடும்பத்தாருடன் பேசும் வசதி, பயண படி, பாதுகாப்பு காப்பீடு உள்ளிட்டவைகள் கிடைக்கும். நாசாவில் பணிபுரிவோர் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி: அது போல் ஐரோப்பிய ஏஜென்சியில் ஜெர்மனியில் வசிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு 66,588 யூரோ (ரூ. 59,34,785) மற்றும் பிரான்சில் வசிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு 70,143 யூரோ (ரூ. 62,51,632) தொடக்க சம்பளம் கிடைக்கும். ஐரோப்பிய விண்வெளி வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ வசதிகள், சம்பளம், விடுமுறைகள், வீட்டுக்கு செல்லும் செலவுகள், 10 ஆண்டுகள் பணி செய்த பிறகு ஓய்வூதியம் உள்ளிட்டவை கிடைக்கும். மேலும், இவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
ஸ்பேஸ் எக்ஸ்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக மனிதர்கள் இல்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. ஸ்பேஸ்எக்ஸ் தனது விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு 141,500 அமெரிக்க டாலர்கள் (ரூ. 1,20,17,464) சம்பளமாக கொடுக்கிறது.
தகுதி என்ன? விண்வெளி வீரராக பொறியியல் தொழில்நுட்பம், பொறியியல் படிப்பில் முதுகலை படித்திருக்க வேண்டும். நாசாவில் பணியாற்ற அமெரிக்க குடிமகனாக இருத்தல் வேண்டும்.