சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நடிகர் தாடி பாலாஜி, தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் மற்றவர்களும் இதை செய்யத் துணியலாம் என்பதால் அஜித்தை போல் நடிகர் விஜய்யும் கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நம்மை மகிழ்விக்கவே நடிக்கிறார்கள் என நினைக்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அது போல் அவர்களின் படத்தில் உள்ள நெகட்டிவிட்டியை கைவிட வேண்டும்.
இதுதான் எல்லா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்துவது! அதாவது முதலில் உங்கள் தாய், தந்தை, குழந்தை, குடும்பத்தை பாருங்கள். அப்பறம் சினிமா நடிகர்களை நேசிக்கலாம் என்பதுதான். ஆனால் இதை கேட்காத ரசிகர்கள் அந்த நடிகரை போலவே சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது, மதுபானம் அருந்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
உண்மையில் அந்த நடிகருக்கு அந்த பழக்கமே இருக்காது. ஆனாலும் நடிப்புக்கு அது தேவைப்படுவதால் அப்படி செய்கிறார் என்ற புரிதல் கூட இல்லாமல் சில இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள். அது போல் சாவு வீட்டுக்கு வந்தாலும் அந்த நடிகர், நடிகைகளை பார்க்க ஒரு கூட்டம் கூடுவது, அவர்களுடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முந்துவது என ரசிகர்களின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லாமல் உள்ளது.
ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டே எம்ஜிஆர், ராமராஜன் உள்ளிட்ட கலைஞர்கள் சினிமாவில் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சிகரெட் பிடிப்பது , மது குடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என ஒரு கொள்கைகளை கடைப்பிடித்தனர். அது போல் தனக்கு பிடித்த நடிகர்களின் புகைப்படத்தையோ பெயரையோ உடம்பில் டாட்டுவாக குத்துவது என இருக்கிறார்கள்.
டாட்டூக்கள் குத்துவது பாதுகாப்பாக பல இடங்களில் செய்யப்படுகிறது என்றாலும் சில இடங்களில் குறைந்த பணத்தில் டாட்டூ என்பதால் அங்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எங்கு குத்துவது என விவஸ்தை இல்லாமல் போகிறது. தொப்புள், அந்தரங்க உறுப்புகள், மார்பகங்கள், நாக்கு, கண்கள், முக்கிய நரம்புகள் உள்ளிட்ட இடங்களில் குத்துகிறார்கள்.
சினிமா நடிகர்களின் ரசிகர்கள்தான் இப்படி என்றால் அரசியல் கட்சித் தலைவர்களும் அப்படித்தான் உள்ளனர். தங்கள் வாகனங்களில் தான் சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களின் படத்தை ஒட்டியிருத்தல், பெயரை நம்பர் பிளேட்டில் எழுதுதல், கட்சியின் கொடியை, சின்னத்தை குறித்தல் என ஏகபோகத்திற்கு இவர்களின் தவறுகள் செல்கின்றன.
அந்த வகையில் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள தாடி பாலாஜி, தற்போது செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது இடது புற மார்பில் விஜய்யின் முகத்தை டாட்டூவாக வரைந்து கொண்ட அவர், உடன் விஜய்யின் பிரபல வாக்கியமான என் நெஞ்சில் குடியிருக்கும் என்பதையும் சேர்த்து எழுதியுள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அஜித்தை தல என அழைத்த போதும், கடவுளே அஜித்தே என ரசிகர்கள் பொதுவெளியில் அழைத்த போதும் சரி, ரசிகர்களை கண்டித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இனி தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்றும் இதனால் தன் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது போல் தாடி பாலாஜியின் செயலை நடிகர் விஜய்யும் கண்டிக்க வேண்டும். அப்போதுதான் அவரை பார்த்து விட்டு விஜய் ரசிகர்களோ கட்சித் தொண்டர்களோ டாட்டூ குத்திக் கொள்ள கிளம்ப மாட்டார்கள். இது தவறான மூடப்பழக்கம் என்பதை உணர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.