சென்னை திரும்பும் “உலக செஸ் சாம்பியன்” குகேஷ் - வரவேற்க ஸ்பெஷல் கார்.. தமிழக அரசு பிரமாண்ட ஏற்பாடு!

post-img
சென்னை: செஸ் உலக சாம்பியனாக இன்று சென்னை திரும்பும் குகேஷுக்கு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் ஸ்பெஷல் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் டிங் லின்னை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தி, ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம்குளிர வைத்துள்ள குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி, முர்மு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்துளை தெரிவித்தனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். "18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷிற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது" என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சாதனை வெற்றி படைத்த குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் டிசம்பர் 12 ஆம் தேதி நடப்பு சாம்பியனான சீனா வீரர் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷை, முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி பதிவிட்டிருந்ததோடு, தொலைப்பேசி வாயிலாகவும் டி.குகேஷை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ்-க்கு, ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி.குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நாடு திரும்புகிறார் உலக செஸ் சாம்பியன் குகேஷ். சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் இன்னோவா காரில் செஸ் சாம்பியன் குகேஷ் படத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் "The New King in.. The Kingdom of Chess" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

Related Post