பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி சென்னையில் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்-ஆப் தரவரிசையில் திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம் பிடித்திருப்பதாகக் கூறினார். தருமபுரியை சேர்ந்த மாணவி ஹரினிகா, திருச்சி மாணவி ரோஷினி பாணு ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆம் இடத்தை பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற 102 பேரில், நூறு பேர் மாநில திட்டத்தில் பயின்றவர்கள் என்றும் தெரிவித்தார். ஏழரை சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 28 ஆயிரத்து 425 மாணவர்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
தரவரிசை தொடர்பான புகார்களை வரும் 30-ஆம் தேதிவரை தெரிவிக்கலாம் என அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால், ஜூலை 2ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.