கோவையில் 11.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய அரசு.. ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்

post-img
கோவை: நிலம் கையகப்படுத்திய வழக்கு ஒன்றில் சுப்ரீம்கோர்ட் முக்கிய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவானது, கோவை மக்களின் கவனம் பெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள், பலவருடம் காலம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை காண முடியும்... அப்படி பயன்படுத்தப்படாத நிலங்கள், அதன் உரிமையாளர்களுக்கே திரும்பவும் வழங்கப்பட்டும் வருகின்றன. நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அவை மீண்டும் திரும்பக் கிடைத்திருப்பது அதன் உரிமையாளர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிலம் கையகம்: இந்நிலையில், நிலம் கையகப்படுத்திய வழக்கு ஒன்றில் சுப்ரீம்கோர்ட் முக்கிய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.. கடந்த 1988ல் உப்பிலிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் வீட்டு வசதி திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 11.95 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியிருந்தது.. இப்படி நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் கடந்த 2008ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் சிங்காநல்லுாரியில் குடியிருக்கும் சிலர், இந்த வழக்கை தொடுத்திருந்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்தது... அத்துடன் இந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது அதிரடி உத்தரவு: இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் அரசு வழக்கறிஞர் இந்திரா ஆகியோர் தங்களது மனுக்களை ஏற்றுக்கொண்டு அரசின் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்று தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.. இதையடுத்து நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவையும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாதங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும், நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவு பிறப்பித்தனர். பெருத்த கவனம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்திய முடிவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Related Post