டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக தலைவருமான வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்தச் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, பாரத் தர்ம ஜன சேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற பாஜக கூட்டணி மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பிரதமர் மோடிக்கு, கோபுர வடிவ நினைவுச் சின்னத்தை வழங்கிய சந்திரபாபு நாயுடு, அவரிடம் பேசியுள்ளார். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் இல்லத்தில் 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், சந்திரபாபு நாயுடுவும், பிரதமர் மோடியும் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) முக்கிய கூட்டாளியாக தெலுங்கு தேசம் கட்சி உள்ளது.
லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ' ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் அண்மையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா நாட்டின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சி எம்.பிக்கள் விமர்சித்தனர்.
அப்போது லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும்; எனவே மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட மின்னணு வாக்கெடுப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் 12 ராஜ்யசபா மற்றும் 27 லோக்சபா எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜக எம்.பி செளத்ரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பிக்கள் வில்சன், செல்வகணபதி உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.