சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வானகரத்தில் குவிந்துள்ளனர். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக மதிய உணவு சைவம் மற்றும் வஞ்சரம் மீன் வறுவலோடு கறி விருந்து ரெடியாகி வருகிறது. 8,000 பேருக்கு சைவ உணவும், 2000 பேருக்கு அசைவு உணவும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதம், வஞ்சரம் வறுவல் என சுடசுட உணவு வகைகள் தயாராகி வருகிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். காலை 10 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிட்டு இருந்த அறிக்கையில், "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, இன்று காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்து கொள்கிறார்கள். அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டம் ஜெயலலிதா காலத்தில் இருந்தே இதே மண்டபத்தில் நடைபெற்று வருவதால், இந்த முறையும் வரவேற்பு பேனர்கள், கொடி, தோரணம் என வானகரம் பகுதி முழுவதும் களைகட்டியுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க வரும் கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று சைவ உணவு மற்றும் அசைவ உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8,000 பேருக்கு சைவ உணவும், 2000 பேருக்கு அசைவ உணவும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதம், வஞ்சரம் வறுவல் என சுடசுட உணவு வகைகள் தயாராகி வருகிறது. சைவ உணவு பிரியர்களுக்காக தனியாக சைவ உணவும் ரெடி செய்யப்பட்டு வருகிறது. இதில் அறுசுவகையுடன் கூடிய உணவு சைவ பிரியர்களுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.
அசைவ உணவு:
மட்டன் பிரியாணி
மட்டன் குழம்பு
சிக்கன் ரோஸ்ட்
வஞ்சரம் மீன் வறுவல்
முட்டை மசாலா
வெள்ளை சாதம்
தக்காளி சாதம்
தயிர்
சைவ உணவு:
வெஜ் பிரியாணி
தம்ரூட் அல்வா
பருப்பு வடை
புடலங்காய் கூட்டு
பால் கறி கூட்டு
வத்த குழம்பு
மோர் குழம்பு
அடை பிரதமன் பாயாசம்
கேசரி,
இட்லி,
பொங்கல்,
வடை,
சாம்பார்,
சட்னி,
ஐஸ்கிரீம் உள்பட 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.