சென்னை: இந்தியாவில் தங்கம் தான் மிகவும் முக்கியமான ஒரு சேமிப்பாக இருக்கிறது. அதேநேரம் நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தை வாங்க முடியாத சூழலே பலருக்கும் இருக்கிறது. ஆனால், இந்தியாவை விட சில நாடுகளில் தங்கம் விலை குறைவாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் எப்போதும் பொதுமக்கள் தங்கத்தையே பிரதான சேமிப்பாகக் கருதுவார்கள். எந்தவொரு பிரச்சினை வந்தாலும் தங்கம் இருந்தால் பணம் கிடைக்கும் என்பதே இதற்கான காரணமாகும்.
தங்கம் விலை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. இன்று கூட சென்னையில் 22 கேரட் தங்கம் சற்று விலை உயர்ந்து ரூ.7140க்கும் 24 கேரட் தங்கம் ரூ. 7789க்கும் வத்தகமானது. நமது நாட்டில் தங்கம் விலை இந்தளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், பலரும் தங்கத்தை வாங்கவே தயங்குகிறார்கள். அதேநேரம் பல வெளிநாடுகளில் நமது நாட்டை விடத் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. அப்படிக் குறைவாக இருக்கும் 5 நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்
அப்படி தங்கம் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்றாகத் துபாய் இருக்கிறது. அங்கே 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 296.25 திர்ஹாமாக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 6,830.73 ரூபாயாக இருக்கிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 320 திர்ஹாமாக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.7378ஆக இருக்கிறது.
குறைவு: அதேபோல கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி நாட்டிலும் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. அங்கு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 6500 என்ற ரேஞ்சிலேயே இருக்கிறது. அதேபோல 24 கேரட் தங்கம் அங்கு ஒரு கிராம் சுமார் ரூ.7105ஆக இருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டிலும் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. அங்கு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 124.80 ஆஸ்திரேலிய டாலர்களாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,815ஆக இருக்கிறது. மறுபுறம் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 136.10 ஆஸ்திரேலிய டாலராக (இந்திய மதிப்பில் 7,427.26 ரூபாய்) இருக்கிறது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலும் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. அங்கு இன்று ஒரு கிராம் தங்கம் 22 கேரட் 3,284,100 கொலம்பிய பெசோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6535 என்ற ரேஞ்சில் இருக்கிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 3,585,260 கொலம்பிய பெசோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 7134 என்ற ரேஞ்சில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தோனேசியா: தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியாவிலும் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. அங்கு 24 கேரட் தங்கம் 13,274,000 இந்தோனேசிய ரூபியா, அதாவது ரூபாய் மதிப்பில் 7168ஆக இருக்கிறது. அதேபோல 22 கேரட் தங்கம் 12,159,000 இந்தோனேசிய ரூபியாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 6565ஆக இருக்கிறது. இது தவிர கம்போடியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவை விடத் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது.
எடுத்து வரலாமா: இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.. அதாவது இந்தளவுக்கு ரேட் வித்தியாசம் இருந்தால் வெளிநாட்டில் தங்கத்தை வாங்கி இந்தியாவுக்கு எடுத்து வரலாமே என்ற கேள்வி வரும். இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. பெண் பயணிகள் 40 கிராம் (அதிகபட்ச மதிப்பு ஒரு லட்சம் வரை), ஆண் பயணிகள் 20 கிராம் (அதிகபட்ச மதிப்பு ரூ. 50,00 0வரை) தங்கத்தை எடுத்து வரலாம்.. அவர்களுக்கும் குறிப்பிட்ட காலம் வெளிநாட்டில் இருந்து இருக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதை மீறித் தங்கத்தை எடுத்து வந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage