பாட்னா: பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணிகள் தொடங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், பயணிகள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவி புரிந்தனர்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று (அக்டோபர் 11) இரவு 9.35 மணியளவில் வடகிழக்கு சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் சென்றுகொண்டிருந்த 12506 நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் இரவு 9.35 மணிக்கு டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே தடம் புரண்டன. மூன்று ஏசி பெட்டிகள் உட்பட 6 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
ரயில் தடம் புரண்ட தகவலறிந்த ரயில் பாதுகாப்பு படை மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் அவ்வழியாக வரவேண்டிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. ரயில் தடம் புரண்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில அரசு தரப்பில் பக்சர் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்ட அதிகாரிகளிடம் விபத்து நடைபெற்ற இடத்தில் துரிதமாக செயல்பட அறிவுறுத்தி உள்ளதாக பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ரயில் தடம் புரண்ட விபத்தை தொடர்ந்து, மாநில தலைநகரான பாட்னாவில் உள்ள பிஎம்சிஎச், எய்ம்ஸ் மற்றும் ஐஜிஐஎம்எஸ் மற்றும் ஆரா, பக்சர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களுக்கு படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
#WATCH | Bihar: Visuals from Raghunathpur in Buxar where 6 coaches of North East Express train derailed; Railway and police officials are present on the spot. pic.twitter.com/l87QzriNgX
ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு படையினருடன், பொதுமக்களும், சக ரயில் பயணிகளும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்த நிலையில் பயணிகளும், பொதுமக்களும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவினர்.
தொடர்ந்து, தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 பேர் இந்த விபத்தில் பலியாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கவிழ்ந்த ரயில் பெட்டிகள் மோசமாக உருக்குலைந்துள்ளன. பொதுமக்கள் உதவியுடன் பயணிகள் மீட்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.