சென்னை: எம்.ஜி.ஆர் 37-வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதில், எம்ஜிஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு உள்ளார்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி, அனைத்துப் பகுதிகளிலும் எம்ஜிஆர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் எம்.ஜி.ஆர் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.
சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்ட நேரடி நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நிர்வாகம், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியது.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. தமது ஆட்சியில், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிட்டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும் பிரதமர் மோடி தான்.
எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். எம்.ஜி.ஆருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து தங்கள் கடின உழைப்பாலும் மக்கள் மீது கொண்ட அன்பாலும் உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை, ஒரு சகாப்தம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுகவை சீண்டி வந்ததன் காரணமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், பாஜக தனி அணியாகவும், அதிமுக தனி அணியாகவும் லோக்சபா தேர்தலைச் சந்தித்தன. இரு அணிகளுமே ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, இனி என்றைக்குமே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி அண்மையில் தெரிவித்தார். இப்படியான சூழலில், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி, எம்ஜிஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டுள்ளார் அண்ணாமலை. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.