இன்ஸ்டா காதலியை பார்க்க சென்ற வேளச்சேரி இளைஞர்.. பிறந்தநாள் அதுவுமாக திருப்பூரில் நடந்த துயரம்

post-img
திருப்பூர்: இன்ஸ்டாகிராமில் அறிமுகமான காதலியை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து திருப்பூர் வந்த இளைஞர் காதலியுடன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர், அவரது காதலி மற்றும் நண்பர் ஒருவர் என 3 பேரும் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். காதலியின் பிறந்தநாளுக்காக திருப்பூர் வந்தபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் (வயது 20). ஆகாஷ் சென்னையில் உள்ள இசேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியின் அறிமுகம் கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சிக்கோட்டையை சேர்ந்த மாணவியும் ஆகாஷும் நட்பாக பேசி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு பேசி வந்தனர். இதற்கு குறிஞ்சிக்கோட்டையை சேர்ந்த ஐடிஐ மாணவர் மாரிமுத்து என்பவர் உதவி செய்துள்ளார். இதற்கிடையே தான் பள்ளி மாணவிக்கு கடந்த 18 ஆம் தேதி பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் காதலர் ஆகாஷ் மாணவியை நேரில் சந்தித்து கிஃப்ட் மற்றும் வாழ்த்துக்களை கூற ஆசைப்பட்டுள்ளார். இதற்காக காதலியிடம் உங்கள் ஊருக்கு வருகிறேன் என்று சொல்லியதாகவும், அதற்கு மாணவியும் ஒகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இளைஞர் ஆகாஷ் காதலியை சந்திக்க அவரது ஊருக்கு சென்றிருக்கிறார். சம்பவத்தன்று ஆகாஷ் அவரது காதலி மற்றும் நண்பர் மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் மானுப்பட்டி பகுதியில் எலையமுத்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்குள்ள குளத்தில் விழுந்தது. 3 பேரும் மோட்டார் சைக்கிளோடு குளத்துக்குள் விழுந்தனர். 15 அடி ஆழமுள்ள குளம் என்பதால் 3 பேரும் குளத்தில் நீச்சல் தெரியாமல் தத்தளித்து அபயக்குரல் எழுப்பியுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்திலும் யாரும் பார்க்காததால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்து சென்ற மாணவி திரும்பி வராததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். உறவினர்களிடம் சொல்லியும் எங்கு போனார் என்று தெரியாததால், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசாரும் தேடி வந்தனர். 2 நாட்கள் ஆகியும் மாணவி வராததால் பெற்றோர் அதிர்சியடைந்திருந்தனர். இந்த நிலையில் தான் நேற்று அந்த குளத்தில் மூழ்கிய 3 பேரும் பிணமாக மிதந்துள்ளனர். இது குறித்து குடும்பத்தினருக்கு, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post