2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மீண்டும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அதற்கு முன்பாக ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை நாளை மத்திய அரசு வெளியிட உள்ளது. இது அகவிலைப்படி உயர்வு தொடர்பான ரேங்கிங் ஆகும். இந்த ரேங்கிங் வைத்து அவகவிலைப்படி எந்த அளவிற்கு உயர்த்தப்படும் என்று யுகம் செய்ய முடியும். வரும் 31ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
முக்கிய அறிவிப்பு:
இதற்கு இடையில்தான் மத்திய அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 42 நாட்கள் விடுமுறை எடுக்கும் உரிமையை மத்திய அரசு வழங்கி உள்ளது.
அதன்படி மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு, சிகிச்சையின் போது 42 நாள் சிறப்பு விடுப்பு எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க வேண்டும் என்றால் மெடிக்கல் லீவ் எடுக்காமல் 42 நாட்கள் கேசுவல் லீவ், சம்பளத்துடன் எடுக்கலாம்.
மெடிக்கல் லீவை வேறு அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறுநீரகம் அல்லது கல்லீரல் தானம் செய்யும் எந்த ஒரு மத்திய அரசு ஊழியருக்கும் 42 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். உறுப்பு மாற்று செய்வதற்கான அனுமதியை பெற்றதும் அவருக்கு விடுமுறை அளிக்கப்படும்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்காக இந்த வசதியை கொண்டு வர வேண்டும். மாநில அரசு ஊழியர்களும் இதே வசதியை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், " என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.