1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனை எதிர்த்து நமது ராணுவ வீரர்கள் வீரம் செறிந்த யுத்தம் நடத்தினர். பாகிஸ்தானை கார்கில் யுத்தத்தில் வீழ்த்தியதை முன்னிட்டு ஜூலை 26-ந் தேதி ஆண்டு தோறும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய் திவாஸ்) இன்று நாட்டின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும் திராஸ் போர் நினைவிடத்தின் மீது போர் விமானங்கள் பறந்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தின. பிரதமர் மோடி தமது ட்விட்ட ர் பக்கத்தில் கார்கில் போர் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளார்.
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோரும் திராஸ் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திராஸ் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
கார்கில் யுத்தம்: 1999-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் யுத்தம் தொடங்கியது. ஜூலை 26-ந் தேதி வரை இந்த யுத்தம் நடைபெற்றது. ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் தமது பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த கார்கில் யுத்தத்தில் நமது தேசம் 527 மாவீரர்களை வீரத் தியாகம் செய்தது. 1363 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் படுகாயமடைந்தனர். கார்கில் பகுதியை கைப்பற்ற முயற்சித்த பாகிஸ்தான் ராணுவத்தின் 700 பேர் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டு மாவீரர் மேஜர் சரவணன் உள்ளிட்ட வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசம் பல விருதுகளை வழங்கி சிறப்பித்தது.