இரவு நேரத்தில் பரபரத்த ராஜ்பவன்! தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த அண்ணாமலை!

post-img
சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீரென ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இரவு நேரத்தில் நடந்த இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்த சில மாதங்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பைப் படித்து வந்தார். அவர் சமீபத்தில் தான் அந்த படிப்பை முடித்துக் கொண்டு தமிழகம் வந்தார். வந்த உடனேயே அவர் தமிழகம் அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். தமிழ்நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகிறார். அதேபோல பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை தொடர்ச்சியாக ஆளும் தரப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். நேற்று மாலை கூட பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சனத்தை முன்வைத்தார். அண்ணாமலை: கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட அண்ணாமலை, மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது என்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக, பாரதப் பிரதமர் மோடி அரசு வழங்கும் நிதி, எங்குச் செல்கிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். சந்திப்பு: இந்தச் சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். இரவு நேரத்தில் நடந்த இந்த திடீர் சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கூட்டணி எப்படி இருக்கும்: முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தேர்தல் கூட்டணி தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது குறித்து அண்ணாமலை பேசுகையில், "தமிழகத்தின் அரசியல் களம் மாறி இருக்கிறது. நம்மிடமும் வலிமையான ஒரு கூட்டணி இருக்கிறது. கூட்டணியில் அனைவரும் இணக்கமாகவே இருக்கிறோம். தமிழக மக்கள் ஏற்கனவே 2024ல் மும்முனை போட்டியைப் பார்த்துள்ளனர். 2026க்கு நாம் பொறுத்து இருந்து பார்ப்போம். தேசிய பாஜக தலைவர்களுக்கு ஒரு தேசிய சிந்தனை இருக்கும். அதற்கான நேரமும் காலமும் ரொம்ப தூரம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தனது கட்சி கூட்டத்தில் பேசும் போது கூட பாஜக குறித்தே பேசி வருகிறார் என்றே இப்போதும் நான் சொல்கிறேன். அதேநேரம் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கிறோம். ஆளும் கட்சிக்கு எதிராகக் கேள்வி எழுப்பி அதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்"

Related Post