லக்னோ: தாலி கட்டும் நேரத்தில் மணமகனை போலீசார், திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்து அழைத்து சென்றதால் மணமகனின் அண்ணன், மணப்பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார். சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
திருமண வீட்டில் தாலி கட்டும் நேரதில் திடீரெனெ "ஸ்டாப்' என கத்திவிட்டு போலீசார் கை விலங்குடன் மாப்பிள்ளையை கைது செய்வதையும்.. மணப்பெண் கலங்கி நிற்பதையும் சில சினிமாக்களில் பார்த்து இருக்கிறோம்.. இதுபோன்ற சில சம்பவங்கள் அரிதாக நிஜத்திலும் நடந்து விடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
இது குறித்த விவரங்களை பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள சிறிய நகரம் ஒன்றில் கடந்த திங்கள் கிழமை திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடல் புடலாக ரெடியாகியிருந்தது. வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு ஒருபக்கம் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
மற்றொரு பக்கம் மணப்பெண்ணுக்கு அலங்காரங்கள் நடைபெற்று கொண்டு இருந்தது. மணமேடைக்கு மாப்பிள்ளையும் வந்துவிடவே திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. தாலி கட்டுவதற்கு மாப்பிள்ளையும் தயார் ஆக... கெட்டி மேளம் கொட்ட தயராக இசைக்கலைஞர்களும் இருந்தனர். அப்போது மணவீட்டிற்குள் திடீரென அழையா விருந்தாளியாக போலீசார் என்ட்ரி கொடுத்தனர்.
இதைப்பார்த்து திருமண வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். நேரடியாக மணமேடையை நோக்கி வந்த போலீசார், மணமகன் ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால், திருமண வீட்டினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று என்ன வழக்கு என்று மணமகன் வீட்டினர் போலீசாரிடம் கேட்டனர்.
அப்போதுதான், உள்ளூர் மதுபானக் கடை ஒன்றில் கொள்ளையடித்த வழக்கில் மணமகனான பைசல் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் திருட்டு நடைபெற்ற இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் பைசல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால், திருமண வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். மணக்கோலத்தில் இருந்த பெண்ணும் கலக்கத்துடன் இருந்தார்.
அப்போது, திடீரென மணமகனின் ஒன்று விட்ட சகோதரர், மணப்பெண்ணை நான் திருமணம் செய்து கொள்வதாக சம்மதம் தெரிவித்தார். அவ்வளவுதான் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை திருமண வீட்டினர் செய்தனர். இதையடுத்து, திருமணம் திட்டமிட்டபடி சுபமாக நடைபெற்று முடிந்தது. திருமண வீட்டில் சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த டிவிஸ்ட் சம்பங்கள் உத்தர பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.