திண்டுக்கல்: மழைக் காலத்தில் பொதுவாகவே பல்வேறு வகையான நோய்ப் பாதிப்புகள் பரவும். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் இப்போது திடீரென உண்ணி காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
பொதுவாக மழைக் காலம் வந்துவிட்டாலே கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் பல்வேறு வகையான நோய்கள் பரவுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அதையும் தாண்டி மழை காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவுவது வாடிக்கையாகவே இருக்கிறது. ஏற்கனவே இந்தாண்டு பல ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது புதிதாக உண்ணி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உண்ணி காய்ச்சல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.. 61 வயதானவர் இம்மாத தொடக்கத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு அதே மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் அதே அறிகுறிகளுடன் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், டெஸ்ட் முடிவுகள் வரும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த நபரும் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இருவர் உயிரிழப்பு:
இப்படி அடுத்தடுத்து இருவர் உண்ணி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இருந்த பகுதிகளைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியில் வசிக்கும் சத்தியமேரி என்பவருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். உண்ணி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அதில் அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
சுகாதார அதிகாரி விளக்கம்:
இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத் திண்டுக்கல் சுகாதாரத்துறை அதிகாரி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தொடர் மழை காரணமாக உண்ணி காய்ச்சல் ஆங்காங்கே பரவி வருகிறது என்ற போதிலும் இதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை திண்டுக்கல்லில் உண்ணி காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து இருப்பதாகவும் நிலைமை இப்படிக் கட்டுக்குள்ளே இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணி காய்ச்சல் அறிகுறி, சிகிச்சை:
இதை ஆங்கிலத்தில் கியாசனூர் வன நோய் (KFD) என்பார்கள். இது ஒரு வகை உண்ணிகள் (Hemaphysalis spinigera) மூலமாகவே பரவும். கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தசை வலி, வாந்தி, தொண்டைப் புண் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் எதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள். சாதாரண காய்ச்சல் தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம்.