அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில் அந்த வழக்கு ஆகஸ்ட் 23 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக 2020 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.
தைத் தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ 2.76 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கியது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இதன் மீதான விசாரணை கடந்த 20 ஆம் தேதி காலை விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 80 சதவீதம் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதனால் அமலாக்கத் துறையை இதில் சேர்த்துக் கொள்ள முடியாது என தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்றைய தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு இந்த வழக்கு வரவிருந்தது. ஆனால் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் சென்றதால் இந்த வழக்கு ஆகஸ்ட் 23 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.