சென்னை: தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.. குறிப்பாகக் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் என பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
மழை: இதற்கிடையே இப்போது சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி என வட சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருவொற்றியூர், பெரம்பூர், கொருக்குப்பேட்டை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தே வருகிறது. குறிப்பாகச் சென்னை கேகே நகரில் மிகத் தீவிரமான கனமழை பெய்துள்ளது. அங்கே வெறும் 30 நிமிடத்தில் 50 மிமீ மழை கொட்டி இருக்கிறது.
சென்னையில் இப்போது கொட்டி தீர்க்கும் கனமழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "சென்னையில் தினமும் பெய்து வரும் மழை இன்றும் தொடர்கிறது.. தெற்கு, வடக்கு மற்றும் மத்திய சென்னையில் 3 மேகக் கூட்டங்கள் கனமழையைத் தருகிறது.
மழை கொட்டும்: தெற்கே, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடியில் சில பகுதிகள், ராமநாதபுரம். நாமக்கல், தஞ்சை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், சென்னை கே.கே.நகரில் கடந்த 30 நிமிடங்களில் 50 மி.மீ.க்கு மேல் பதிவாகி உள்ளதாகவும் மழை நின்று கொட்டி தீர்த்து வருவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
.
இது தவிர சென்னையில் இப்போது எங்கே மழை மேகங்கள் இருக்கிறது.. எங்கே மழை பெய்து வருகிறது என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் வடசென்னையில் மேலே வலுவான மேகக் கூட்டங்கள் இருக்கிறது. அதேபோல, அண்ணா நகரில் தொடங்கி பெரும்பாலான சென்னையை மேகக் கூட்டங்கள் சூழ்ந்தே இருக்கிறது. இருப்பினும், இரண்டுக்கும் நடுவே பருத்திப்பட்டு உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் மழை மேகங்கள் இல்லை..
ரெட் தக்காளி: இந்த போட்டோவை பகிர்ந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "வடசென்னையில் ரெட் தக்காளி (மிகவும் தீவிரமான மழை) இருக்கிறது. இருப்பினும், 2 மேக கூட்டங்களுக்கும் நடுவே இடைவெளி உள்ள பகுதிகள் துரதிர்ஷ்டவசமானது" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று செப். 18இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்யும்: நாளை செப்.19இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.